நமது நிருபர்
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தாக்கல் செய்த தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.600 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது. தேஜ கூட்டணியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனும், லட்சிய ஜனநாயக கட்சி தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் காமராஜ் நகரில் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தானும் தனது மனைவி சிந்து ஸ்ரீ சார்லஸும் ரூ.340 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.270 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரமாணப் பத்திரத்தின்படி, ரூ.44 கோடி மதிப்புள்ள வைர நகைகளையும், ரூ.38 கோடி மதிப்புள்ள ஆடம்பரக் கைக்கடிகாரங்களையும், ரூ.26 கோடி மதிப்புள்ள 17.5 கிலோ தங்க நகைகளையும், ரூ.3.8 கோடி மதிப்புள்ள 135 கிலோ வெள்ளிப் பொருட்களையும் வைத்துள்ளார். அவரது மனைவி 3.6 கிலோ எடையுள்ள ரூ.5.35 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும், ரூ.2.1 கோடி மதிப்புள்ள வைர நகைகளையும், ரூ.1.68 கோடி மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் நகைகளையும், ரூ.1.14 கோடி மதிப்புள்ள ஆடம்பரக் கைக்கடிகாரங்களையும் வைத்துள்ளார்.
சார்லஸ் மார்ட்டின் கடந்த நிதியாண்டில் ரூ.59.37 கோடி வருமானம் ஈட்டியதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு வங்கிகளில் ரூ.200 கோடிக்கும் அதிகமான வைப்புத் தொகைகளையும், தொழிலில் பார்ட்னர்ஷிப் அடிப்படையில் ரூ.14.28 கோடி முதலீடுகளையும் வைத்துள்ளேன். உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் ரூ.210 கோடி மதிப்பில் கடன்கள் இருக்கிறது. தனக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய வருவாயைக் கொண்டு சொத்துக்களை வாங்கியதாகவும், சட்டவிரோத நிதியை நிதிநிலை அறிக்கைகளில் ‘பிணையற்ற கடன்களாக’ (Unsecured loans) தவறாகச் சித்தரித்ததாகவும் குற்றம் சாட்டி, அமலாக்கத்துறை அவர் மீது பணமோசடி வழக்கைப் பதிவு செய்துள்ளது.
நிதி முறைகேடுகள் தொடர்பான ஒரு வழக்கு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுதவிர, லாட்டரி செயல்பாடுகள் மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள் தொடர்பாக மூன்று குற்றவியல் வழக்குகள் மேற்கு வங்க மாநிலத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மார்டின் தாயார் லீமா ரோஸ் வரும் தேர்தலில் திருச்சி மாவட்டம் லால்குடியில் அமைச்சர் நேருவை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது மைத்துனரான ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவரும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
