நமது நிருபர்வரலாற்றில் முதல் முறையாக, கோவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் களம் காணாத தேர்தலாக, இந்த சட்டமன்ற

நமது நிருபர்

வரலாற்றில் முதல் முறையாக, கோவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் களம் காணாத தேர்தலாக, இந்த சட்டமன்ற தேர்தல் அமைந்துள்ளது.

தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் மிகுந்த கோவை மாவட்டத்தில் ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கம் இருந்தது. லோக்சபா தேர்தல், சட்டமன்ற தேர்தல் எதுவாக இருப்பினும், கோவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் குரல் வலுவாக ஒலித்தது. கோவை எம்.பி., தொகுதியில் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளே போட்டியிட்டு வந்தனர்.

மாவட்டத்துக்கு உட்பட்ட கோவை கிழக்கு, பேரூர், தொண்டாமுத்துார், சிங்காநல்லுார், வால்பாறை தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போட்டியிட்டும், வெற்றி பெற்றும் வந்துள்ளனர். பார்வதி கிருஷ்ணன், உமாநாத், ரமணி, பாலதண்டாயுதம் உள்ளிட்ட பல முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்கள், கோவையை களமாக கொண்டு அரசியல் செய்தவர்களே.

அப்படி இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், காலப்போக்கில் சிறுத்துப்போனதன் விளைவாக, கோவையில் அவர்களுக்கான முக்கியத்துவமும் குறைந்து விட்டது. மாநிலத்திலேயே ஐந்தே ஐந்து தொகுதிகளை மட்டுமே பெற்றிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கோவையில் தொகுதிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், வரலாற்றில் முதல் முறையாக கம்யூனிஸ்ட் கட்சிகள் களம் காணாத தேர்தலாக, இந்த தேர்தல் அமைந்துள்ளது.

இதற்கு, கூட்டணிச் சிக்கல்களை ஒரு காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர். வறட்டு சித்தாந்தத்தை தலையில் வைத்துக் கொண்டு ஆடுவதும், தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் தான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.

Source link