நமது நிருபர்
வழக்கறிஞர்கள் மனுக்களை தயார் செய்யும் போது, முந்தைய காலகட்டத்தில் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டுவதற்கு, ஏஐ தொழில்நுட்பம் கொடுக்கும் போலி தீர்ப்புகளை மேற்கோள் காட்டுகின்றனர் என்று கூறி சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விவாதம் நடந்தது.
அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது : சில வழக்கறிஞர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனுக்களை எழுத தொடங்கியுள்ளனர் என்பதை இப்போது நினைத்துப் பார்க்க நாங்கள் பயப்படுகிறோம். இது முற்றிலும் தேவையற்றது, என்றார். இதையடுத்து நீதிபதி நாகரத்னா கூறுகையில், சமீபத்தில் வழக்கு விசாரணையின் போது இதனை நான் கண்டேன். இதுவரை வழங்கப்படாத தீர்ப்பு மனுக்களில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. ஆய்வு செய்தபோது அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது என தெரிவித்தார்.
இதையடுத்து ‘இதுபோன்ற தீர்ப்புகள் ஒன்றல்ல, தொடர்ச்சியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன,’ என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.நீதிபதி நாகரத்னா, ‘போலி தீர்ப்புகளை மேற்கோள் காட்டுவது, நீதிபதிகளுக்கு கூடுதல் சுமையை உருவாக்குகிறது’ என கவலை தெரிவித்தார்.
முறையான சரிபார்ப்பு இல்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திஉருவாக்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி மனுக்கள் தயார் செய்யப்படுவது அதிகரித்து வருவதற்கு சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில், ஏஐ உருவாக்கிய கற்பனையான தீர்ப்பை மேற்கோள் காட்டியதற்காக ஒரு வழக்கறிஞர் மீது மும்பை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
