– நமது நிருபர் –
அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும், நடிகருமான ராமராஜன், த.வெ. க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில், 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் ராமராஜன்; தீவிர எம்.ஜி.ஆர்., ஆதரவாளர்.
தொடர்ந்து, ஜெயலலிதா ஆதரவாளராக இருந்த அவர், 1998 லோக்சபா தேர்தலில், திருச்செந்துார் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பின், அ.தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார்.
தற்போது வரை அ.தி.மு.க.,வின் உறுப்பினராகவே இருக்கிறார்; அவரை, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கண்டுகொள்ளவே இல்லை.
இந்நிலையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர் விபினுக்கு ஆதரவாக, ராமராஜன் பிரசாரம் செய்கிறார். விபினின் தந்தை வைகுண்டராஜா, ராம ராஜனின் தீவிர ரசிகர்.
கடந்த ஆண்டு ராமராஜன் நடித்து வெளியான சாமானியன் படத்தை, வைகுண்டராஜா தன் தியேட்டரில் நீண்ட நாட்கள் ஓட்டினார். இதற்கு கைமாறாக, விபினுக்கு ஆதரவாக ராமராஜன் பிரசாரம் செய்து வருகிறார்.
ராமராஜன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆலங்குளத்தில் விபினுக்கும், மதுரை மேலுாரில் சுயேச்சையாக போட்டியிடும் என் நண்பரின் மகன் முருகனுக்கும் பிரசாரம் செய்ய உள்ளேன்’ என, தெரிவித்துள்ளார்.
