– நமது நிருபர் –
கடந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி, சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியை அறிவித்தார்.
அதன்பின் செய்தியாளர் சந்திப்பின்போது, அருகில் அமர்ந்திருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எதுவும் பேசவில்லை. அவரது மவுனமும் முக பாவனையும், ‘பழனிசாமியை பேச கூட அனுமதிக்கவில்லை. அவரை கட்டாயப்படுத்தி கூட்டணியில் சேர்த்துள்ளது பா.ஜ.,’ என்ற விமர்சனத்தை தோற்றுவித்தது. அந்த கூட்டணியின் பெயரிலும் சர்ச்சை ஏற்பட்டது. ‘என்.டி.ஏ., கூட்டணி’ என்று அமித் ஷா சொல்ல, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி என்று பழனிசாமி சொல்லி வந்தார். இரு கட்சிகளும் இணைந்து போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஏதும் அடிக்கடி நடத்தவில்லை. அதனால், ‘இரு கட்சி தலைமைகளுக்கும் இணக்கமில்லை, தொண்டர்களுக்கும் இணக்கமில்லை’ என்ற பேச்சும் பரவலாக இருந்தது.
அமித் ஷாவை சந்திக்க, கடந்த ஓராண்டில் நான்கு முறை டில்லி சென்று வந்தார் பழனிசாமி. ‘பழனிசாமி டில்லிக்கு ஓடுவதற்கு பெயர் தான் கூட்டணிக்கு தலைமை தாங்குவதா?’ என தி.மு.க.,வினர் சீண்டினர். அ.தி.மு.க., தொண்டர்களும், ‘ஜெயலலிதா இருந்திருந்தால், பா.ஜ., மேலிடமே சென்னைக்கு வந்திருக்குமே’ என ஆதங்கப்பட்டனர். மொத்தத்தில், பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் பழனிசாமி இருக்கிறார் என்ற தோற்றமே அனைவர் மத்தியிலும் இருந்தது.
ஒரு பக்கம் தி.மு.க., மெகா கூட்டணி அமைத்து வர, மறுபக்கம் அ.ம.மு.க.,வை கூட்டணியில் சேர்ப்பதில் ஏற்பட்ட குழப்பம், தே.மு.தி.க., நழுவியது, பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் சேர்ந்தது என, அ.தி.மு.க., தலைமை பலவீனமாகவே எடை போடப்பட்டது. தி.மு.க.,வில் சுறுசுறுப்பாக வேலை நடக்கிறது; ஆனால், தேர்தல் இவ்வளவு நெருங்கியும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு பற்றி எந்த தகவலும் இல்லையே என, அ.தி.மு.க., மற்றும் தமிழக பா.ஜ., தொண்டர்கள் கடந்த வாரம் வரை கூட கவலையில் ஆழ்ந்திருந்தனர்.
தி.மு.க., திண்டாட்டம்
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியில் 10 கட்சிகள் இருந்தன. 2021 சட்டசபை தேர்தலின் போது, எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. 2024ல் லோக்சபா தேர்தலில் அந்த கூட்டணி அப்படியே இருந்தது. நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் மட்டும் புதிதாக இணைந்தது. ஆனால், எட்டு கட்சிகள் மட்டும் போட்டி யிட்டன. தற்போதைய தேர்தலில், ‘மெகா கூட்டணி அமைப்போம்’ என சொல்லி வந்த பழனிசாமிக்கு மாறாக, தி.மு.க.,வே 22 கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியை அமைத்துள்ளது. மெகா கூட்டணி அமைப்பதற்கு முன்பே, ‘தி.மு.க., கூட்டணி அப்படியே இருக்கிறது. அது அவர்களுக்கு பெரிய பலம்’ என்ற கருத்து நிலவியது.
தி.மு.க., அமைத்த கூட்டணியின் பிம்பம் பிரமாண்டமாக இருந்தாலும், காங்கிரசுடன் உடன்பாடு வருவது பிரசவ வேதனைக்கு நிகரான தலை வேதனையாகி விட்டது. ஒரு கட்டத்தில், கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகிவிடும் என்றே தோன்றியது. ஸ்டாலினும், ‘அவர்கள் போனால் போகட்டும்’ என்று சொன்னதாக செய்திகள் வெளியாகின. ராஜ்யசபா தேர்தல் வந்ததால், வேறு வழியின்றி காங்கிரசுக்கு 28 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது.
மார்க்.கம்யூ.,க்கு ஒரு தொகுதி குறைத்ததில் கடும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. மிகுந்த போராட்டத்திற்கு பின் தான் ஒப்புக் கொண்டுள்ளனர். தே.மு.தி.க.,வுக்கான பொருட்செலவு தேவைதானா என, தி.மு.க.,விலேயே பலருக்கு கேள்வி இருக்கிறது. தி.மு.க., ‘அவமானப்படுத்துகிறது’ எனக்கூறி, கூட்டணியில் இருந்து த.வா.க., தலைவர் வேல்முருகன் வெளியேறி விட்டார். அ.தி.மு.க., தனது கூட்டணியில் முக்கிய கட்சிகளுடன் உடன்பாடு செய்துவிட்டது என்ற செய்தி வந்த பின்னரே, அவசர அவசரமாக இரண்டு பொது தொகுதிகளோடு மொத்தம் எட்டு தொகுதிகள் என, விடுதலை சிறுத்தைகளோடு உடன்பாடு செய்தனர்.
‘இரண்டு லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி என, தொடர்ந்து நான்கு தேர்தல்களில் தோல்வியே காணாத கூட்டணி’ என்று மேடைக்கு மேடை பெருமை பேசியும்; அதிகப்படியான உணவை இலையில் போட்டுக்கொண்டு, சாப்பிட்டு முடிக்க முடியாமல் தவிப்பதைப் போல், வாரக்கணக்கில் பேச்சு நடத்தியும் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடிக்க முடியாமல், மெகா கூட்டணியை வைத்துக் கொண்டு தி.மு.க., திணறியது.
சுமுகமான தீர்வு
இந்நிலையில், மார்ச் 2ம் தேதி டில்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்தார். அதை தொடர்ந்து, பா.ஜ.,வுக்கு 60 தொகுதிகள் கேட்டு, அமித் ஷா நெருக்கடி கொடுக்கிறார் என்ற பேச்சு பரவியது. ‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பழனிசாமி தலைமை என்றாலும், அனைத்தையும் தீர்மானிப்பது பா.ஜ., தலைமைதான். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளையும் டில்லி தலைமைதான் முடிவு செய்யும். அ.தி.மு.க.,வை டில்லியில் அடகுவைத்து விட்டார் பழனிசாமி’ என்றெல்லாம், தி.மு.க., கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது, அரசியல் விமர்சகர்கள் பலரும், பேசியும் எழுதியும் வந்தனர். இவை, அ.தி.மு.க., தொண்டர்களின் உற்சாகத்தை பறித்தன.
மீண்டும் மார்ச் 19ம் தேதி, பழனிசாமி டில்லி சென்றார்; 23ம் தேதி பீயூஷ் கோயல் சென்னைக்கு வந்தார். இந்த மூன்றே சந்திப்புகளில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. பா.ஜ., – 27, பா.ம.க., – 18, அ.ம.மு.க., — 11 என்று, 23ம் தேதியே அறிவிப்பு வந்து விட்டது. ஒதுக்கீட்டை பழனிசாமி தான் அறிவித்தார். அதுவும், அ.ம.மு.க., தினகரன், பீயூஷ் கோயல் உட்பட அனைவரையும் அ.தி.மு.க., அலுவலகத்திற்கு வரவழைத்து பேசிய பழனிசாமி, ‘அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., – 27, பா.ம.க., – 18, அ.ம.மு.க., – 11 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலையில் ஆலோசனை நடத்தி மதியம் அறிவித்து விட்டோம்.
தே.ஜ., கூட்டணி என்பது உணர்வுப்பூர்வமான அணி. நாங்கள் டில்லி சென்றாலே, திட்டமிட்டு அவதுாறு பரப்புவது முதல்வர் ஸ்டாலினின் வாடிக்கை. தோல்வி பயத்தில் இருக்கும் ஸ்டாலின், நாங்கள் டில்லி சென்றாலே அஞ்சுகிறார். தி.மு.க., கூட்டணியில்தான் இழுபறி நீடிக்கிறது’ என்றார். மீதமுள்ள கூட்டணி கட்சியினரிடமும் சுமுகமாக பேசி முடிக்க ஏற்பாடு செய்து விட்டார் பழனிசாமி.
முன்னதாக, 130 இடங்கள் வரை தான் இந்த முறை அ.தி.மு.க.,வை போட்டியிட வைக்க பா.ஜ., தரப்பு அழுத்தம் கொடுக்கும் என ஆருடம் சொல்லப்பட்ட நிலையில், அதையெல்லாம் தவிடு பொடியாக்கிய பழனிசாமி, கடந்த முறை போலவே தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க., போட்டியிட கூடுதல் இடங்களை தக்கவைத்தது, அக்கட்சியினரை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
தி.மு.க., கூட்டணியில், கடும் கசப்புகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவாகி உள்ள நிலையில், எந்த பிரச்னையும் இன்றி சுமுகமாக தொகுதி பங்கீட்டை முடித்ததோடு, பா.ஜ.,வுக்கு 30 தொகுதிகளுக்கும் குறைவாக ஒதுக்கி, கட்டுக்குள் வைத்துள்ளார் எனவும் அ.தி.மு.க.,வினர் பழனிசாமியை மெச்சுகின்றனர். இதன் வாயிலாக, தமிழக சட்டசபை தேர்தலை டில்லிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான போட்டி என்ற முதல்வர் ஸ்டாலினின் பிரசாரத்தை பழனிசாமி முறியடித்துள்ளார். ‘யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே’ என்பதுபோல, இது அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கொண்டாடுகின்றனர் அக்கட்சியினர்.
