-நமது நிருபர்-
‘கேவி குப்பம் தொகுதியில் போட்டியிட மறுத்தது, ஏமாளித்தனமா, அரசியல் தெளிவா என்பதை புரிந்து கொள்ளுங்கள்,’ என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்தபோது என்ன நடந்தது என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் திருமாவளவன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது: தொகுதி பங்கீடு நடந்தபோது, விசிகவுக்கு கேவி குப்பம் தருவதாக முடிவாயிற்று. அது வேலுார் மாவட்டம். அங்கே இன்னொரு தலித் தலைவர் நிற்கிறார். அதனால், திமுக நிர்வாகிகளிடம் நான், ‘தொகுதி கொடுப்பதில் மகிழ்ச்சி. அதுவும் வெற்றி பெறக்கூடியது தான். ஆனால் வேண்டாம்’ என்று கூறினேன்.
‘ஏன்’ என்று அவர்கள் கேட்டனர். ‘அதிமுக கூட்டணியில் அந்த தொகுதியில் எதிர்த்து நிற்பவர் ஒரு தலித் தலைவர். இரண்டு தலித் அமைப்புகள் ஒரு தளத்தில் நேருக்கு நேர் மோதுவது நாகரிகமாக இருக்காது. வேண்டாம் வேறு தொகுதி கொடுங்க’ என்று கூறி விட்டேன்.இது ஏமாளித்தனமா, அரசியல் தெளிவா என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு திருமாவளவன் பேசியுள்ளார்.
ஏற்கனவே, சென்னை திரு.வி.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டியிடுவதை திருமாவளவன் வரவேற்று பேட்டி கொடுத்தார். இது, திமுக கூட்டணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ‘தலித் அமைப்பின் தலைவரை எதிர்த்து போட்டியிட மாட்டோம்’ என்று கூட்டணி பங்கீட்டின்போது கூறியதுடன், அதை பிரசாரத்திலும் தம்பட்டம் அடிப்பது போல பேசியது, திமுகவினர் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
கேவி குப்பத்தில் திமுக சார்பில் ராஜேஸ்வரி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
