– நமது நிருபர் -ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், சமூக

– நமது நிருபர் –

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், சமூக வலைதளத்தில் முழு திரைப்படமும் வெளியாகி உள்ளது. அரசியல் மாற்றத்திற்காக திட்டமிட்டு கசிய விடப்பட்டதா அல்லது யாரேனும் திருட்டுத்தனமாக வெளியிட்டனரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் நடித்து வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜயின் கடைசி படம் என்ற அறிவிப்பால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், படம் வெளியாவதற்கு பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று, ஜனநாயகன் திரைப்படம் முழுதும் ‘டெலிகிராம்’ செயலியில் வெளியாகி, தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் களத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்த, இப்படத்தை திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாக, ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது.

ஒரு சிலர், சுயலாபத்திற்காக யாரோ ஒருவர், டெலிகிராம் செயலியில் வெளியிட்டு இருக்கலாம் என்கின்றனர்.

‘படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகளை சமூக வலைதளத்தில் பரவ விட்டது தி.மு.க.,வினர் தான்’ என, விஜய் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். மேலும், ‘இப்படக் காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில், ஜனநாயகன் படக்காட்சிகளை பகிர்ந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக டி.ஜி.பி.,க்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும், விஜய் நடித்த துப்பாக்கி, பீஸ்ட் படங்களை போலவே, ஜனநாயகன் படத்திலும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்டியுள்ளதாக கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விஜய்க்கு சாதகமா, பாதகமா

‘சட்டசபை தேர்தல் நடப்பதற்கு இரு வாரங்களுக்கு முன், ஜனநாயகன் படம் வலைளத்தில் வெளி வந்துள்ளதால், அனுதாப அலை உருவாகி, விஜய் செல்வாக்கு அதிகரிக்கும்; தேர்தல் வெற்றிக்கு அப்படம் உறுதுணையாக இருக்கும்; பெண்களின் ஆதரவு கிடைக்கும்’ என த.வெ.க.,வினர் கருதுகின்றனர்.
அதே சமயத்தில், மற்றொரு பக்கத்தில் பாதக அம்சங்களும் தலைதுாக்கியுள்ளன. பெரிய பட்ஜெட்டில், 500 கோடி ரூபாய் செலவில் தயாரித்த படத்தை முடக்கியதால், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பால் தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டு உள்ளார். தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களுக்கும் வருமான இழப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.

பிரபலங்கள் கண்டனம்

ஜனநாயகன் திரைப்படம், தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே, இணையத்தில் வெளியானதற்கு, ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:
நடிகர் ரஜினிகாந்த்: ஜனநாயகன் திரைப்படம், இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது, அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள், இதற்கு எதிராக குரல் எழுப்பி, அரசு இதை செய்தவர்களை கண்டுபிடித்து, கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம், இனியும் தொடரக்கூடாது.
நடிகர் சூர்யா: இது, மனதை உடைக்கும் அநீதி. தயவு செய்து, ஜனநாயகன் திரைப்படத்தை, இணையதளத்தில் பார்க்கவோ, பகிரவோ அல்லது இதைப்பற்றி பேசவோ வேண்டாம். அவர்களின் உழைப்பிற்கு மதிப்பு கொடுங்கள். என் நண்பர்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது, மன்னிக்க முடியாதது.
நடிகர் சிவகார்த்திகேயன்: ஒவ்வொரு திரைப்படமும், ஒவ்வொருவரின், ஆசை, ரத்தம், வியர்வையால் உருவாகிறது. தயவு செய்து, இணையதளத்தில் வெளியான பிரதியை தவிர்க்கவும். திரையரங்கில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கு பார்த்து ரசியுங்கள். இந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, விஷால், கார்த்தி, இயக்குனர் வெங்கட்பிரபு உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source link