– நமது நிருபர் -: தமிழகத்தில் கட்டப்பட்ட பாலங்கள் மீது, சாலை அமைக்காமல், 600 கோடி ரூபாய் அளவுக்கு செலவு கணக்கு

– நமது நிருபர் -:

தமிழகத்தில் கட்டப்பட்ட பாலங்கள் மீது, சாலை அமைக்காமல், 600 கோடி ரூபாய் அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.

தமிழக நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 66,000 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில், முக்கிய சந்திப்புகள், ஆறுகள் கடக்கும் இடங்கள், ரயில்வே கடவுகள் உள்ளிட்ட இடங்களில், மேம்பாலங்கள், கீழ் பாலங்கள், தரைப்பாலங்கள், உயர்மட்ட பாலங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுகிறது.

நான்கு வழிச்சாலை

கடந்த ஐந்து ஆண்டுகளில், நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 1,085 கி.மீ., நீளமுள்ள சாலைகளை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி, 8,313 கோடி ரூபாயில் துவக்கப்பட்டன.

இதில், 692 கி.மீ., சாலை பணிகள், 6,191 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு உள்ளன. இதேபோல், 1,268 தரைப்பாலங்கள் கட்ட, 2,635 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஐந்து ஆண்டுகளில், 1,342 கோடி ரூபாயில், 42 உயர்மட்ட பாலங்கள், 2,148 கோடி ரூபாயில், 46 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

அத்துடன், 2,388 கோடி ரூபாயில், 30 புறவழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன.

கோவையில் 1,791 கோடி ரூபாயில், ஜி.டி.நாயுடு மேம்பாலம்; 393 கோடி ரூபாயில் சுப்பிரமணியம் மேம்பாலம்; மதுரையில் 150 கோடி ரூபாயில், வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்; கோரிப்பாளையத்தில் 200 கோடி ரூபாயில், சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டு உள்ளன.

சமீபத்தில், சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில், 61 கோடி ரூபாய் செலவில், ‘எல்’ வடிவ மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இப்பாலம் சரியாக அமைக்கப்படவில்லை என, சர்ச்சை எழுந்தது.

கடந்த ஐந்தாண்டுகளில் கட்டப்பட்ட பாலங்களில் பெரும்பாலானவற்றில் தார் கலவை பயன்படுத்தி, சாலை அமைக்கப்படவில்லை.

மேம்பால கான்கிரீட் மட்டுமே, ஓடு தளமாக பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம், சாலைகள் அமைக்காமல், 600 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரம் சொல்கிறது.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் சிலர் கூறியதாவது:

மேம்பாலங்கள், உயர்மட்ட பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் கட்ட, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்படுகிறது. அதன்படி, மேம்பாலம் கட்டிய பின், அதன் மீது, தார் கலவையால் சாலை அமைக்க வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சியில், செலவை குறைக்க, 10 ஆண்டுகளாக மேம்பாலத்தின் மத்திய பகுதிகளில் தார் கலவை பயன்படுத்தி, சாலை அமைப்பதில்லை. ஏறும் பகுதி மற்றும் இறங்கும் பகுதியில் மட்டும் சாலை அமைக்கப்பட்டது.

அம்பலம்

மற்ற பகுதிகளில், கான்கிரீட் ஓடுதளம் பயன்படுத்தப்பட்டது. சாலை போடாமல், பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டது.

அதே பாணியை பின்பற்றி, கடந்த ஐந்து ஆண்டுகளில், பல பாலங்களில் சாலை போடாமல், 600 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக, கணக்கு காட்டப்பட்டுள்ளது.

மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பாலத்தில், கான்கிரீட் ஓடுதளத்தில், வாகனங்கள் தள்ளாடியபடி சென்றது சர்ச்சைக்குஉள்ளானது.

இதை அடுத்து, அவசர கதியில் மேம்பாலத்தில் தார் சாலை அமைக்கப்பட்டு பிரச்னை சரி செய்யப்பட்டது. இதன் வாயிலாக, பல மேம்பா லங்களில் இப்பிரச்னைகள் இருப்பது அம்பலமாகி உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link