– நமது நிருபர் -தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவும், த.வெ.க..,வுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆதரவாகவும் பேசிய

– நமது நிருபர் –

தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவும், த.வெ.க..,வுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆதரவாகவும் பேசிய தமிழக காங்., மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிலர், கட்சியை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர். கட்சி இரண்டாக பிளவுபடுவதை தடுக்க, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை, டில்லி மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சமாதானப்படுத்தி உள்ளார்.

வெற்றி வாய்ப்பு

‘தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற, அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஏதேதோ செய்யப் போவதாக தகவல் வருகிறது. அதெல்லாம் நல்லது அல்ல’ என கூறியுள்ளார்.

கட்சியின் டில்லி மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்., நிர்வாகிகளுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள 42 தொகுதிகளை தேர்வு செய்து, அதை தி.மு.க.,விடம் வழங்கி, அதிலிருந்து வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள 28 தொகுதிகளைப் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் முகுல் வாஸ்னிக் தவிர, கட்சியின் மற்றொரு பார்வையாளரான உத்தரகண்ட் எம்.எல்.ஏ., குவாசி முகமது நிஜாமுதீன், மேலிட பொறுப்பாளர்கள் கிரீஷ் ஷோடங்கர், நிவேதித் ஆல்வா ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழக காங்., முன்னணி தலைவர்களான தங்கபாலு, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், சொர்ணா சேதுராமன் உள்ளிட்டோருடன் கட்சியின் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னணி அமைப்புகளின் தலைவர்கள், வார் ரூம், ஐ.டி., அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பேசியதாவது: தற்போது காங்கிரசுக்கு, 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களின் தொகுதிகளுடன், புதிதாக 11 இடங்களைக் கண்டறிய வேண்டும். புதிதாக 11 இடங்களைக் கண்டறிய, கூடுதலாக நாம் 25 தொகுதிகளை தேர்வு செய்ய வேண்டும்.

பெண்களுக்கு ‘சீட்’

அதாவது, மொத்தம் 42 தொகுதிகளை தேர்வு செய்வோம். அவற்றை தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவிடம் வழங்கி, 28 தொகுதிகளை கேட்டுப் பெற பேச்சு நடத்துவோம்.

தேர்தலில் போட்டியிட, கட்சிப் பணிகளில் முழு நேரமாக ஈடுபட்டோர், போராட்டங்களில் பங்கேற்றோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். வரும் சட்டசபைத் தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடுவோரில், 33 சதவீதம் அளவுக்கு, பெண்களுக்கு ‘சீட்’ ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை மேலிடப் பார்வையாளர் மற்றும் பொறுப்பாளர்கள் ஏற்றுக் கொண்டனர். கூட்டம் முடிந்த பின், முகுல் வாஸ்னிக் அளித்த பேட்டியில், “தி.மு.க.,வுடனான தொகுதி பங்கீடு பேச்சு, சுமுகமாக முடிந்துள்ளது.

”தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் காங்., வலிமையாக இருக்கிறது. யார் எங்களுக்கு எதிராக இருந்தாலும் வெற்றி பெறுவோம்,” என்றார்.

மயங்கி விழுந்தார் கிரீஷ் ஷோடங்கர்

சென்னை சத்தியமூர்த்தி பவனில், இரண்டாவது மாடியில் நடந்த, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின், முகுல் வாஸ்னிக் புறப்பட்டு ‘லிப்டில்’ கீழே இறங்கினார். அவரை வழியனுப்பி வைக்க, கிரீஷ் ஷோடங்கர் படிக்கட்டு வழியே இறங்கினார். அவர், இதய அறுவை சிகிச்சை செய்தவர்.
அவரது பின்னால் கட்சி நிர்வாகிகள் சூழ்ந்து வந்தனர். பசி மயக்கத்தில் இருந்த அவர் திடீரென மயங்கி சரிந்தார். அருகிலிருந்த தமிழக காங்கிரசார் அவரை தாங்கி பிடித்தனர். பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். ஓரிரு நாட்கள் சென்னையில் தங்கி ஓய்வெடுத்த பின், டில்லி செல்ல உள்ளார்.

Source link