– நமது நிருபர் – தி.மு.க., நியமித்துள்ள வியூக நிறுவனங்கள், தலைமையை குழப்புவதோடு, கட்சியைத் தவறாக வழிநடத்துவதாக

– நமது நிருபர் –

தி.மு.க., நியமித்துள்ள வியூக நிறுவனங்கள், தலைமையை குழப்புவதோடு, கட்சியைத் தவறாக வழிநடத்துவதாக அக்கட்சியினரால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: முழுக்க முழுக்க வியூக நிறுவனங்களை மட்டும் நம்பியே, இந்த தேர்தலில் தி.மு.க., களமிறங்குகிறது. அதன்படி, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ‘பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் – பென்’, ரிஷி ராஜ்சிங்-கின் ‘ஐபேக்’ மற்றும் ராபின் சர்மாவின் ‘சோ டைம் கன்சல்டிங்’ ஆகிய நிறுவனங்கள், தேர்தல் வேலையை செய்கின்றன. இவை தவிர, துணை முதல்வர் உதயநிதிக்கு, முன்னர் தி.மு.க.,வுக்கு வியூக வகுப்பு பணியில் இருந்த சுனில் கனுலோலு தலைமையில், ஒரு ‘டீம்’ வேலை செய்கிறது.

ஆரம்பத்தில், கட்சிக்காக மீடியாக்களிடம் பேசுவது, ‘சர்வே’ எடுப்பதுமாக இருந்த, ‘பென்’ நிறுவனம், தற்போது நிர்வாகிகளிடம் நேரடியாக பேசி, வேட்பாளர் தேர்வையும் செய்கிறது. ‘பென்’ ஆட்களை முழுமையாக முதல்வர் நம்புவதால், அவர்கள் வைத்ததுதான் கட்சிக்குள் சட்டம். இதனால், வேட்பாளர்கள் தேர்வில் ‘பென்’ ஆட்கள் நன்றாக சம்பாதித்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு பென் ஊழியர், வசூல் புகாரில் சிக்கி வெளியேற்றப்பட்டார்; ஆனாலும் வசூல் நின்றபாடியில்லை.

இந்நிலையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை, ‘என் ஓட்டுச்சாவடி; வெற்றி சாவடி’ போன்ற திட்டங்களை, ‘ஐபேக்’ நிறுவனம் மேற்கொள்கிறது. அதன் வாயிலாக, கட்சிக்காரர்களிடம் நேரடியாக பேசி வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்திருக்கிறது, ஐபேக். இப்படி இரு தரப்பினரும், கட்சிக்காரர்களிடம் பேசி ஆலோசனைகளை வழங்குவதால், யார் சொல்லுவதை கேட்க வேண்டும் என்றே தெரியவில்லை. பென் – ஐபேக் இடையே, ‘யார் பெரியவர்’ என்ற போட்டி நிலவுவதால், நிறைய தவறுகளும் இடம் பெறுகின்றன.

அதனால்தான், ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வில், கோவை மாவட்டம், காரமடை நகரச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வெங்கடேஷிடம், அவர் நகரச் செயலர் என நினைத்து, முதல்வர் பேசியுள்ளார். அதேபோல, வாரிசே இல்லாத ஒரு நிர்வாகியிடம், ‘உங்கள் மகன் செயல்பாடுகள் சரியில்லை’ என, முதல்வர் ஸ்டாலின் கோபத்தை காட்டிய நிகழ்வும் நடந்துள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்’ உள்ளிட்ட, ‘ஸ்லோக அரசியல்’ எதுவுமே ‘சக்சஸ்’ ஆகவில்லை. இதை மறைக்க, இப்போது தொடர் மாநாடுகளை போட்டிப் போட்டு நடத்துகின்றனர்.

அதேபோல, டில்லி விவகாரங்களை கவனித்து வரும், ‘சோ டைம் கன்சல்டிங்’ நிறுவனம், தன் பங்கிற்கு புது ஐடியாக்களை ஐ.டி., அணி நிர்வாகிகளுக்கு கொடுத்து குழப்பி வருகிறது. இவை ஒருபுறமிருக்க, துணை முதல்வர் உதயநிதியின் தனிப்பட்ட அரசியல் ஆலோசனைகளுக்காக, அவரின் குறிஞ்சி இல்லத்தில் முகாமிட்டு, சுனில் கனுகோலு டீம் வேலை செய்கிறது. இதனால், குறிஞ்சி இல்லத்துக்குள் ‘பென்’, ‘ஐபேக்’ ஆட்களுக்கு அனுமதி இல்லை.

தமிழகம் முழுக்க, உதயநிதியை முன்கூட்டியே பிரசாரம் செய்ய வைக்க, ‘பென்’ திட்டமிடுகிறது. ஆனால், உதயநிதியை சுனில் டீம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால், ‘பென்’ நிறுவன திட்டம் அரங்கேறாமல் உள்ளது. இந்த குழப்பங்கள் அனைத்தும் தி.மு.க., வேட்பாளர் தேர்விலும் பிரசாரத்திலும் எதிரொலிக்கிறது. தேர்தல் வரை இப்படி குழப்பம் நீடித்தால், கட்சிக்கு இழப்பாகவே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link