– நமது நிருபர் –
துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில் நடத்தப்பட்ட அகழாய்வு குழிகளில் உள்ள தொல்பொருட்களை, அவை கிடைத்த நிலையிலேயே பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் வசதி செய்ய, மத்திய தொல்லியல் துறை ஏற்பாடு செய்து வருகிறது.
துாத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது ஆதிச்சநல்லுார் கிராமம். இங்கு, 2,500 ஆண்டுகளுக்கு முன், மிகவும் நாகரிகமான மக்கள் வாழ்ந்துள்ளனர்.
கண்ணாடி தளம் அதற்கான ஆதாரங்கள், 1876ல், பிரிட்டிஷ் ஆய்வாளர் பிரட்ரிக் ஜாகர், 1899 – 1905 காலகட்டத்தில், மத்திய தொல்லியல் துறையை சேர்ந்த ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா, 2005ல், சத்தியமூர்த்தி ஆகியோர் செய்த அகழாய்வுகளின் வாயிலாக கிடைத்தன.
கடந்த 2021 முதல் மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டலம் வாயிலாக, மூன்று இடங்களில், தொடர்ந்து அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக, அகழாய்வில் கிடைக்கும் தொல்பொருட்களை, அருகில் உள்ள அருங்காட்சியகங்களில் பாதுகாக்கும் நிலையில், இங்குள்ள தொல்பொருட்களை, அந்தந்த அகழாய்வு குழிகளிலேயே வைத்து, மேலே கடினமான கண்ணாடியால் மூடி, அந்த கண்ணாடி தளத்தின் வழியாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன், கடந்தாண்டு திறந்து வைத்தார்.
தற்போது, 2021 – 2023 காலகட்டத்தில், ஆற்றங்கரையோரத்தில் நடந்த அகழாய்வு குழிகளில் உள்ள தொல்பொருட்களை, அகழாய்வு நிலையிலேயே வைத்து பாதுகாக்கும் ஏற்பாடுகளை, மத்திய தொல்லியல் துறை செய்ய உள்ளது. இதற்காக, அகழாய்வு இடங்களுக்கு மேல் கொட்டகை அமைக்கும் பணி தொடங் கப்பட்டுள்ளது.
தட்பவெப்பம் இதுகுறித்து, திருச்சி மண்டல தொல்லியல் கண்காணிப்பாளர் அறவாழி கூறியதாவது:
ஏற்கனவே, அகழாய்வு குழிகளுக்குள் மின் விளக்குகளையும், குழிகளின் மீது கண்ணாடி தரையையும் அமைத்து பாதுகாத்துள்ளோம்.
தற் போது, கண்ணாடி தரை அமைக்காமல், ஈமத்தாழிகள், அவற்றில் உள்ள பொருட்கள், தட்பவெப்பம், காற்று உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாத வகையில் பாதுகாத்து, அகழாய்வு நிலையிலேயே பாதுகாக்க உள்ளோம். இது, பார்வையாளர்களுக்கு பு திய அனுபவத்தை தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
