– நமது நிருபர் – தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, விருகம்பாக்கம், விருத்தாசலம் ஆகிய இரண்டில் எந்த தொகுதியில்

– நமது நிருபர் –

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, விருகம்பாக்கம், விருத்தாசலம் ஆகிய இரண்டில் எந்த தொகுதியில் நிற்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

தி.மு.க., கூட்டணியில் சென்னையில் உள்ள, விருகம்பாக்கம் தொகுதி கேட்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, இந்த தொகுதியில், தே.மு.தி.க., சார்பில் பார்த்தசாரதி வெற்றி பெற்றுள்ளார்.

பார்த்தசாரதி மீண்டும் போட்டியிட்டால், அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்கும் வி.என்.ரவியை எதிர்த்து தே.மு.தி.க., வெற்றி பெறுவது சிரமம் என தி.மு.க., கருதுகிறது. அதனால், பிரேமலதா அல்லது அவரது மகன் விஜய பிரபாகரன் இருவரில் ஒருவர், அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என தி.மு.க., தலைமை விரும்புகிறது.

ஆனால், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடவே பிரேமலதா விரும்புகிறார். கட்சி துவக்கிய முதல் தேர்தலில், விஜயகாந்த் வெற்றி பெற்ற தொகுதி, தனக்கும் வெற்றியை தரும் என பிரேமலதா நம்புகிறார்.

இதற்கிடையில், அ.தி.மு.க., கூட்டணியில் மயிலம் தொகுதி பா.ம.க., – எம்.எல்.ஏ., சிவகுமார், விருத்தாசலத்தில் போட்டியிட விரும்புகிறார் என்றும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், மயிலம் தொகுதியில் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

விருத்தாசலம் தொகுதியில் பா.ம.க., போட்டியிட்டால், சுலபமாக வெற்றி பெறலாம் என பிரேமலதா கருதுவதால், அத்தொகுதியை பிடிவாதமாக கேட்கிறார். ஆனால், விருகம்பாக்கத்தில் நிற்க, தி.மு.க., தரப்பில் வலியுறுத்துவதால், குழப்பத்தில் இருக்கிறார் பிரேமலதா, என்கின்றனர் அவரது கட்சியினர்.

Source link