– நமது நிருபர் -:
‘பனை விவசாயியை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் எஸ்.ஐ., இசக்கிராஜாவை பணிநீக்கம் செய்ய வேண்டும்’ என, கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில், ஜாதி சார்பு போலீஸ் அதிகாரிகள், தங்களுக்குள் அமைப்புகள் துவங்கி செயல்படுவது அம்பலமாகி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், பாறைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிராஜா. போலீஸ் எஸ்.ஐ.,யான இவர், சமூக வலைதளங்களில், சிலம்பம் சுற்றுவது, காரில் ஏறி நின்று துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோக்கள், படங்கள் வெளியிட்டு, ‘சிங்கம்’ பட சூர்யா போல கெத்து காட்டி வருபவர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ரவுடி நீராவி முருகனை காலில் சுட்டுப்பிடித்தார்.
குற்றச்சாட்டு இச்சம்பவத்திற்கு பின், ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளைதுரையின் மறு உருவம் தான் இந்த இசக்கிராஜா என்ற பேச்சு கிளம்பியது.
அவரின் செயல்பாடுகளும் அப்படி தான் உள்ளன. இசக்கிராஜா குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
அதற்கு ஏற்ப, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே, மருதம்புத்துார் பகுதிக்கு சீருடை இன்றி சென்றுள்ளார். கள் இறக்குவதாக புகார் வந்துள்ளதாக கூறி, பனை மர தொழிலாளி மணிகண்டன், என்பவரை காலில் நான்கு முறை சுட்டுள்ளார்.
கள் விற்பனை புகார் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல், ரவுடியை சுடுவது போல இசக்கிராஜா செயல்பட்டு இருப்பதால், அவரை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜாதி சார்பு போலீஸ் அதிகாரிகள், தங்களுக்குள் அமைப்புகள் துவங்கி நடத்தி வருவதும் அம்பலமாகி உள்ளது.
சிபாரிசு இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறிய தாவது:
தென் மாவட்டங்களில், போலீசார் ஜாதி ரீதியாக பிளவுபட்டு உள்ளனர். அவர்கள் சார்ந்த ஜாதி பெயர்களின் எழுத்துகளை சுருக்கி, அமைப்புகளை துவங்கி நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்குள் நிதி பரிமாற்றம் நடக்கிறது. தங்கள் ஜாதியைச் சேர்ந்த நபர்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபாரிசும் செய்கின்றனர்.
திருநெல்வேலி, துாத்துக்குடி போன்ற மாவட்டங்களில், ஜாதி சார்பற்ற போலீசாரே இல்லை என்ற அளவுக்கு ஆகி விட்டது. அவரவர் ஜாதிக்கு ஏற்ப, அமைப்புகள் துவங்கி நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
