-நமது நிருபர்-
மக்கள் நலக்கூட்டணி தொடங்கியதை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கிய சந்திரகுமார் உள்ளிட்டோரை, பிரேமலதா இத்தனை ஆண்டுகளாக துரோகிகள் என்று விமர்சித்து வந்தார். இப்போது அவர்களே கூட்டணி கட்சியினராக மாறியுள்ள நிலையில், பிரேமலதா அவர்களை எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2011 தேர்தலில் தேமுதிக சார்பில் 29 பேர் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக கூட்டணியில் இவர்கள் வெற்றி பெற்றனர். விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.அது தான் தேமுதிக அடைந்த இமாலய வெற்றி. அதற்கு பிறகு அந்த கட்சிக்கு பெரும் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.
2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, கடைசி நேரத்தில் முடிவை மாற்றி, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது.இதனால் அதிருப்தி அடைந்த அந்த கட்சியின் ஒரு பிரிவினரை, திமுக தனியாக உடைத்தது. அவர்கள் மக்கள் தேமுதிக என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தனர்.அவர்களில் முக்கியமானவர் சந்திரகுமார். அவரும், மேட்டூர் பார்த்திபனும், கும்மிடிப்பூண்டி சேகர் உள்ளிட்டோரும் இணைந்து கட்சி தொடங்கி, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். பிறகு திமுகவில் இணைந்துவிட்டனர்.
விஜயகாந்த் அவர்களை துரோகி என்று விமர்சித்தார். பிரேமலதாவும் சமீப காலம் வரை அவர்களை துரோகிகள் என்றே கூறி வருகிறார்.இப்போதும், சந்திரகுமார் எம்எல்.ஏ.,வாக இருக்கிறார். மேட்டூர் பார்த்திபன், 2019ல் எம்.பி.,யாக தேர்வானார். இப்போதும் திமுகவில் பொறுப்பில் இருக்கிறார்.
கும்மிடிப்பூண்டி – சேகர், மயிலாடுதுறை -அருள்செல்வன், விருத்தாசலம் – முத்துக்குமார், சூலுார் – தினகரன் ஆகியோரும் இப்போதும் திமுகவில் தான் இருக்கின்றனர். இவர்களை எல்லாம் துரோகிகள் என்று வசைபாடிய பிரேமலதா, அவர்களை கூட்டணி கட்சியினராக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
