– நமது நிருபர் –
முன்னாள் முதல்வர் காமராஜரை, கருணாநிதியும் திமுகவின் மற்ற தலைவர்களும் கேவலமாக பேசிய காலம் ஒன்று உண்டு. காங்கிரஸ் கட்சியை அழித்து திமுகவை வளர்ப்பதற்காக அன்று திமுக பேசிய பேச்சுகள், இப்போதும் வைரல் ஆகின்றன.
1960, 70களில் தான் இது நடந்தது. அப்போது முதல்வராக இருந்த காமராஜரை திமுக.,வினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். காமராஜரின் கல்வி அறிவை திமுக மேடைப் பேச்சாளர்கள் அப்போது கடுமையாகக் கிண்டல் செய்தனர். அவரை ‘பச்சைத் தமிழன்’ என்று ஒரு தலைவர் அழைத்தபோது, திமுகவினர் அவரை ‘படிக்காதவர்’ என்றும், நவீன காலத்திற்குத் தகுதியற்றவர் என்றும் ஏளனம் செய்தனர். (பிற்காலத்தில் இதுவே அவருக்கு ‘படிக்காத மேதை’ என்ற புகழைத் தேடித்தந்தது வேறு விஷயம்)
ஏற்கனவே தரம் தாழ்ந்து பேசும் திமுக மேடைப் பேச்சாளர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். காமராஜரின் நிறத்தை குறி வைத்தனர். ‘எருமை மாடு தோல் கொண்டவர்’ என்றும், ‘கருப்புக் காக்கா’ என்றும் மட்டரகமாக பேசினர். ‘விருதுபட்டி கருவாட்டுக்காரி மகன்’ என்றும் ஒருமையில் விமர்சித்து, அவரது தாயையும் சேர்த்து அவமானப்படுத்தினர். அக்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. 1967 தேர்தலில் ”காமராஜர், ஒன்பது காலேஜ் கட்டினாரா? அரிசியில் கல் வைத்தாரா?” என்று கேலி செய்தனர்.
அப்போது தீப்பொறி ஆறுமுகம் போன்ற திமுக மேடை பேச்சாளர்கள் சிலர், காமராஜர் திருமணம் செய்து கொள்ளாததையும், அவரது எளிய வாழ்க்கை முறையையும் கொச்சைப்படுத்தும் விதமாக தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தனர்.ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில், காமராஜரை ‘வடநாட்டு ஏஜென்ட்’, ‘ஹிந்தி ஆதரவாளர்’, ‘டில்லியின் அடிமை’ என்று திமுக சித்தரித்தது. 1966ல் டில்லியில் காமராஜரின் வீடு எரிக்கப்பட்டபோது, அந்தச் சூழலை உருவாக்கியதில் திமுகவுக்கும் பங்கு இருப்பதாகக் காங்கிரஸ் தரப்பில் இப்போதும் குற்றம்சாட்டப்படுகிறது.
காமராஜர் மது அருந்தாதவர் என்ற பிம்பத்தை உடைக்க, அவர் ரகசியமாக ‘பீர்’ அருந்துவார் என்ற ஒரு பொய்யான தகவலை அக்கால திமுக மேடைப் பேச்சாளர்கள் கிராமப்புறங்களில் பரப்பினர். இது அவரது ‘கர்மவீரர்’ என்ற பெயருக்குக் களங்கம் விளைவிக்கத் திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1971 தேர்தலில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸை கருணாநிதி கடுமையாக விமர்சித்தார். காமராஜரை ‘வயதானவர்’ என்றும், அவரது அரசியல் முடிந்துவிட்டது என்றும் குறிப்பிடும் வகையில் ‘Clever Politics’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல் பேசி, Cleverயை ‛‛கிழவர் பாலிடிக்ஸ்” (வயதான அரசியல்) என்று நக்கல் செய்தார்.
2025ம் ஆண்டில் கூட, திமுக எம்பி திருச்சி சிவா, காமராஜரின் எளிமையை விமர்சித்து ஏசி (AC) அறையில்லாமல் தூங்க மாட்டார், இறுதிக் காலத்தில் கருணாநிதியிடம் உதவி கேட்டார் என பேசினார். இதுவும் சர்ச்சையானது.
செய்வதை எல்லாம் செய்துவிட்டு, பேசுவதை எல்லாம் பேசிவிட்டு, இப்போது காமராஜர் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் விடாப்பிடியாக கூட்டணியும் வைத்துவிட்டு, காமராஜரை ஆகா ஓகோ என்று திமுகவினர் பாராட்டுகின்றனர்.
ஆனால், பலர் திமுகவின் இந்த இரட்டை வேடத்தை நம்பாமல், காமராஜர் பற்றி திமுக அன்று திட்டிய வசவுகளை இப்போது வைரல் ஆக்குகின்றனர். திமுக ஆதரவு நாளேடுகளில் காமராஜர் பற்றி வெளியிடப்பட்ட கார்ட்டூன்களையும் வெளியிட்டு திமுகவை சாடுகின்றனர்.
