நம்பகத்தன்மைக்கான சர்வதேச கூட்டணி ஜியோ உள்ளிட்ட 15 நிறுவனங்கள் துவக்கம்

புதுடில்லி: ஜியோ, மைக்ரோசாப்ட், நோக்கியா உள்ளிட்ட, உலகின் 15 முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து, தொழில்நுட்ப துறையில் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான ‘டிரஸ்டட் டெக் அலையன்ஸ்’ என்ற கூட்டணியை துவக்கியுள்ளன.

இது குறித்த அந்த நிறுவனங்களின் கூட்டறிக்கை:

ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில், ‘டிரஸ்டட் டெக் அலையன்ஸ்’ துவங்கப்பட்டுள்ளது. இதில், ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 15 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

தகவல் தொடர்பு, கிளவுட் உள்கட்டமைப்பு, செமிகண்டக்டர், மென்பொருள், ஏ.ஐ., என பல்வேறு வகைப்பட்ட தொழில்நுட்ப பிரிவுகளிலும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பொதுவான கொள்கைகளை வகுக்கவும், அதை பின்பற்ற, எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் எந்த நாட்டை சேர்ந்தவையாக இருந்தாலும், வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு ஆகியவற்றில் பொதுவான உறுதிப்பாட்டுடன் செயல்பட இந்த கூட்டணி வழிவகை செய்துள்ளது. இதனால், தொழில்நுட்பத்தின் பலன்களை உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்பிக்கையுடன் பெற இயலும்.

இதுவரை இல்லாத மிக துரித தொழில்நுட்ப மாற்றங்கள், சிக்கலான சூழல் ஆகியவை காரணமாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மீதான தனி நபர்களின் சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன.

பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றிணைந்து, இந்த சந்தேகங்களை களைய வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link