லக்னோ: ”பேட்டிங் வரிசையில் 4வது இடத்தில் களமிறங்கியது எனது நம்பிக்கையை அதிகரித்தது,” என, டில்லி வீரர் சமீர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
லக்னோவில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டியில், டில்லி அணி (145/4, 17.1 ஓவர்) 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை (141/10, 18.4 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் டில்லி அணி, 4.3 ஓவரில், 26/4 ரன் எடுத்து திணறியது. அப்போது ‘இம்பாக்ட்’ வீரராக 4வது இடத்தில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி, 47 பந்தில் 70* ரன் (4X6, 5X4, ‘ஸ்டிரைக்ரேட்’ 148.93) விளாசி வெற்றிக்கு கைகொடுத்தார். உ.பி.,யை சேர்ந்த சமீர் ரிஸ்வி 22, ஆட்ட நாயகனாக ஜொலித்தார். தவிர இவர், சகவீரர் டிரிஸ்டன் ஸ்டப்சுடன் (39*) இணைந்து 5வது விக்கெட்டுக்கு 119* ரன் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து சமீர் ரிஸ்வி கூறியது: போட்டி துவங்குவதற்கு முன், எங்கள் அணியின் பயிற்சியாளர் ‘நீங்கள் 4வது இடத்தில் களமிறங்க தயாராக இருக்கவும். உங்களை நம்புகிறோம். இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்,’ என்று கூறினார். உள்ளூர் ‘டி-20’ போட்டியில் உ.பி., அணிக்காக விளையாடிய போதும், உ.பி., ‘டி-20’ லீக் தொடரில் பங்கேற்றபோதும் 4வது இடத்தில் தான் ‘பேட்’ செய்வேன். தற்போது, இத்தொடரிலும் 4வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கிடைத்திருப்பது தன்னம்பிக்கை அளித்தது. அடுத்து வரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். இதற்கு முன், ஸ்டப்சுடன் இணைந்து ஒரு சில போட்டிகளில் விளையாடி உள்ளேன். இவர், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடக் கூடியவர்.
இவ்வாறு ரிஸ்வி கூறினார்.
கெவின் பீட்டர்சன் பாராட்டு
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறுகையில், ”நெருக்கடியான நேரத்தில் சமீர் ரிஸ்வி விளையாடிய விதம் பாராட்டுக்குரியது. போட்டியில் சதம் விளாசுவதை விட, அணியை வெற்றி பெறச் செய்வதே சிறப்பு. எந்த ஒரு வீரரும், போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது அவசியம். இப்பணியை சமீர் ரிஸ்வி கச்சிதமாக முடித்தார்,” என்றார்.
துவக்க வீரராக வரலாமா
டில்லிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட் (7), ‘ரன்-அவுட்’ ஆனார். இதுகுறித்து, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறுகையில், ”லக்னோ அணியின் பேட்டிங் பலத்தை பார்க்கும்போது, ரிஷாப் பன்ட் உண்மையிலேயே துவக்க வீரரா என்று சிந்திக்க தோன்றுகிறது. கடந்த ஆண்டு பின்வரிசையில் களமிறங்கிய இவர், இம்முறை தனது பேட்டிங் வரிசையில் அதிவேகமாக முன்னேறிவிட்டார் என்று நினைக்கிறேன். இது தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்தும். இவர், கிரிக்கெட்டை ரசித்து விளையாடினாலே போதும்,” என்றார்.
