நயினாரை ஈ.டி. விசாரிக்கக் கோரி தி.மு.க. முறையீடு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 2024ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். 

அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அப்போதைய தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 4 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழக பாஜகவின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளரும், வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ்.இன் மாநில செயற்குழு உறுப்பினருமான கேசவ விநாயகம் ஆகியோரை அமலாக்கத்துறை (ED) விசாரணை செய்யக் கோரி நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதால் மத்திய அமலாக்கத்துறை தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திமுக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “இந்த விவகாரத்தில் சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மூல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அமலாக்கத்தறை வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால் வழக்கு பதிவு செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று (26.03.2026) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கு பாஜகவினருக்கும் உள்ள தொடர்பு குறித்து விரிவான விசாரணை தேவை என்பதே திமுகவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தற்போது சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பணம் பறிமுதல் வழக்கை சட்ட ரீதியாக திமுக கையில் எடுத்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சி.பி.சிஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Source link