நவராத்திரி வழிபாட்டினை எப்போது, எப்படி நிறைவு நிறைவு செய்ய வேண்டும்? கொலு பொம்மைகளை எடுக்கும் முறை என்ன?

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையின் அருளை பெறுவதற்காக அனைவரும் தங்களால் முடிந்த முறையில் வழிபாடு செய்திருப்பார்கள். விஜயதசமியுடன் நவராத்திரி விழா நிறைவடைவதால் நவராத்திரி வழிபாட்டினை எப்படி நிறைவு செய்ய வேண்டும், கொலு பொம்மைகளை எந்த நாளில் எந்த முறையில் எடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நவராத்திரி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று துவங்கியது. விஜயதசமியான அக்டோபர் 20ம் தேதியுடன் நவராத்திரி வழிபாடுகள் நிறைவடைகின்றன. கொலு வைத்தும், கலசம் அமைத்தும், படம் வைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் என எந்த முறையில் நவராத்திரி வழிபாட்டினை மேற்கொண்டிருந்தாலும் விஜயதசமியுடன் நவராத்திரி வழிபாட்டினை நிறைவு செய்து கொள்ளலாம். நவராத்திரி வழிபாட்டினை எந்த நாளில், எப்படி நிறைவு செய்ய வேண்டும்? கொலு பொம்மைகளை எப்படி எடுத்து வைக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

நவராத்திரி 2026 வழிபாட்டினை நிறைவு செய்யும் நாள் :

நவராத்திரி வழிபாட்டினை விஜயதசமி நாளுடன் நிறைவு செய்து கொள்வது தான் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 20ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. செவ்வாய்கிழமையின் வழிபாட்டினை நிறைவு செய்வதும், கொலு பொம்மைகளை எடுப்பதும் சரியானது கிடையாது. அதனால் மறுநாள் அக்டோபர் 21ம் தேதி புதன்கிழமை அன்று தான் நவராத்திரி வழிபாட்டினை நிறைவு செய்ய வேண்டும்.

நவராத்திரி வழிபாட்டினை நிறைவு செய்யும் முறை :

எந்த முறையில் நவராத்திரி வழிபாட்டினை மேற்கொண்டிருந்தாலும் நிறைவு நாளில் ஏதாவது ஒரு சுண்டல், சர்க்கரை பொங்கல் என ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து அன்னைக்கு பூஜை செய்து வழிபாட்டினை நிறைவு செய்ய வேண்டும். “நவராத்திரியின் ஒன்பது நாட்களும் நாங்கள் செய்த வழிபாட்டிற்குரிய பலன்களை எங்களுக்கும், எங்கள் வீட்டு நவராத்திரி வழிபாட்டில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கும் அளித்திட வேண்டும். எப்போதும் எங்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்க அருள் செய்ய வேண்டும் தாயே” என மனதார அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து கொண்ட வழிபாட்டினை நிறைவு செய்ய வேண்டும்.

கொலு பொம்மைகள் எடுக்கும் முறை :

அக்டோபர் 21ம் தேதியன்று பூஜையை செய்த பிறகு கொலுவில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று பொம்மைகளை சாய்த்து வைத்து விட வேண்டும். பிறகு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அந்த சமயத்தில் கொலு பொம்மைகளை எடுத்து, பத்திரமாக எப்போதும் போல் பாதுகாப்பாக வைத்து விட வேண்டும். கொலு படிகளையும் கலைத்து விடலாம்.

கலசத்தை என்ன செய்ய வேண்டும்?

கலசம் வைத்து நவராத்திரி வழிபாட்டினை மேற்கொண்டவர்கள் அதில் இருக்கும் தண்ணீர் வைத்து வழிபட்டிருந்தால், அதற்குள் போடப்பட்ட எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களை பூஜை அறை குப்பையில் சேர்த்து விட்டு, தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிவித்து விட வேண்டும். பிறகு மாவிலையையும் பூஜை அறை குப்பையில் சேர்த்து விடலாம். கலசத்தின் மேல் வைத்த தேங்காய் நன்றாக இருந்தால் அதை உடைத்து ஏதாவது இனிப்பு செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். கலசத்தில் அரிசி வைத்து வழிபட்டிருந்தால், அந்த அரிசியில் சர்க்கரை பொங்கல் செய்து அம்மனுக்கு படைத்து வழிபடலாம். மற்ற பொருட்களை பூஜை அறை குப்பையில் சேர்த்து விடலாம்.

படம், அகண்ட தீபம் வைத்து வழிபட்டவர்கள் செய்ய வேண்டியது :

படம் வைத்து நவராத்திரி வழிபாட்டினை செய்தவர்கள், ஏற்கனவே இருந்த இடத்தில் அந்த படத்தை மாட்டி விடலாம். அகண்ட தீபம் ஏற்றி வழிபட்டவர்கள், பூஜை முடிந்ததும், திரியை உட்புறமாக உள்ளிழுத்து விளக்கை குளிர செய்து விடலாம். இவை எதுவும் இல்லாமல் தினமும் ஏதாவது நைவேத்தியம் படைத்து நவராத்திரி வழிபாட்டினை செய்தவர்கள், விஜயதசமி அன்றே நவராத்திரி வழிபாட்டினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Source link