நவாஸ்கனி சொத்து குவிப்பு வழக்கு: சி.பி.ஐ., விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் குறித்த விசாரணை அறிக்கையை, சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது.

ராமநாதபுரத்தில், 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாஸ்கனி.

கடந்த 2019 மற்றும் 2024ம் ஆண்டு தேர்தல்களில், நவாஸ்கனி தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, வருமானத்துக்கு அதிகமாக 23.58 கோடி ரூபாய் சொத்து குவித்து உள்ளார்; இது வருமானத்தை விட அதிகம் என்பதால், வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல், வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விபரங்கள் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து வழக்கு பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட கோரியும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆஜராகினர்.

இதையடுத்து, நவாஸ்கனி தாக்கல் செய்த வருமான வரி கணக்கு குறித்த ஆவண நகல்களை, ‘சீல்’ வைக்கப்பட்ட உரையில், வருமான வரித்துறை அதிகாரி தாக்கல் செய்தார். அதேபோல், சி.பி.ஐ., தரப்பில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இந்த ஆவணங்களை பத்திரமாக வைத்திருந்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link