நாகர்கோவில்: அரசின் நலத்திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் வீட்டு வாசலுக்கே வந்து சேரும் வகையில் திட்டம் உருவாக்கப்படும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த ரோடு ஷோவில் விஜய் பேசியதாவது: காரைக்குடி மக்களுக்கும் இந்த நேரத்தில் வணக்கம் தெரிவித்து கொள்கிறேன். அன்றைக்கு பேச முடியாமல் போய்விட்டது. கன்னியாகுமரி மண்ணுக்கு வந்ததும், உங்களை சந்திப்பதும் சந்தோஷம். இந்த வெயிலில் வியர்வையில் வந்துள்ளீர்கள். உங்கள் அன்புக்கு கோடான கோடி நன்றிகள்.
அறிவியல் பூர்வமாக
21ம் நூற்றாண்டிற்காக சிறந்த நிர்வாகத்திற்கான தவெகவின் திட்டம். லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசு நலத்திட்டங்கள் சென்று சேரும். அதற்கு ஆதார் கார்டு போல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தை பற்றிய தரவுகள் அதில் இருக்கும்.
பிறப்பில் இருந்தே அவருக்குரிய திட்ட பலன்கள் சென்று சேரும். விண்ணப்பிக்க தேவையில்லை. லஞ்சம் கொடுத்து வேதனை அடைய தேவையில்லை. வீட்டு வாசலுக்கு அரசின் நலத் திட்டங்கள் வந்து சேரும். ஏஐ உதவியுடன் இதற்கான தரவுகள் சாத்தியமாக்கப்படும். இது ஸ்டாலின் விடும் கதை போல் இல்லை. அறிவியல் பூர்மான சாத்தியமானதை சொல்லி காட்டுகிறேன். தவெக சாத்தியபடுத்தி காட்டும்.
இதுவரை,அரசு அமைப்பில், தற்போது அரசு அலுவலகங்களில் ஏதாவது ஒரு வேலைக்காக சென்றால், இழுத்தடிப்பார்கள். இதற்கு காரணம் டப்பு. லஞ்சம்.இப்படி பட்ட அமைப்பு சிறந்த நிர்வாகம் அல்ல. அது துன்புறுத்தல். லஞ்சப்பணம் அதிகாரிக்கு மட்டும் அல்ல. சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் செல்கிறது.முதலில் இதனை முறியடிக்க வேண்டும்.
சூப்பர் ஆப்
அடுத்து அரசு அமைந்து 6 மாதங்களுக்குள் தமிழக சேவை உரிமை திட்டம் நிறைவேற்றப்படும். வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும். டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு,பிறப்பு சான்றிதழ், புகார் பதிவு வரை அனைத்தும் உங்கள் உள்ளங்கைகளில் மொபைல்போனில் இருக்கும். இதில் எந்த சேவை தாமதமானாலும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தரகர் என்றும் ஏதும் இல்லை. எவ்வித லஞ்சமும் இல்லை.
தமிழக அரசின் பட்ஜெட் வெறும் ஆவணமாக மட்டும் தெரியும். அதில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் நிதி எங்கே சென்று சேர்கிறது. யாருக்கு சென்று சேர்கிறது என்பது நமக்கு தெரியாது. அது ஒரு சிதம்பரம் ரகசியம் போல், ஸ்டாலின் ரகசியம் ஆகவே இருக்கிறது. ஆனால், நாம் அதனை மாற்றுவோம்.
பங்காளர்களாக மக்கள்
அடுத்தது Citizen as partners in governenceநமது பொது மக்கள் வாக்காளர்களாக இருக்க தேவையில்லை. மாறாக, மக்கள் அனைவரும் அரசின் பங்காளர்களாக இருப்பார்கள்.My vetri tamilnadu. in என்ற இணையதளம் உருவாக்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை மக்கள் முன்வைக்கலாம்.
கொள்கை முன்மொழிவுகளுக்கு ஓட்டுப்போடலாம்.அரசு சேவைகளை மதிப்பிடலாம். பட்ஜெட் செலவுகளை கண்காணிக்கலாம். மக்கள் அரங்கம் என்ற திட்டம் மூலம் தமிழக வரலாற்றில் மக்கள் டிஜிட்டல் முறையில் சட்டசபையில் மனுக்கள் சமர்ப்பிக்க முடியும்.10 ஆயிரம் சரிபார்க்கப்பட்ட கையெழுத்துகளுடன் ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டால் அதிகாரப்பூர்வ பதிலை அரசு அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.
ஐந்து லட்சம் கையெழுத்து கொண்ட மனு எனில் சட்டசபையில் விவாதம் நடத்தப்படும். சட்டசபை கூட்டத்தொடரில் ஒரு முழு நாள் பொது மக்கள் மனுக்களுக்கு தனி நேரம் ஒதுக்கப்படும்.
தலைநகர்
தமிழகம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப தலைநகரமாக மாறும். 2035ம் ஆண்டுக்கள் செயற்கை நுண்ணறிவு இந்தியாவின் பொருளாதாரத்திற்கு 1.7 டிரில்லியன் டாலர் வரை சேர்க்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நமது பொறியியல் சமூகத்துடனும், புலம் பெயர் சமூகத்துடனும் இந்த பொருளாதாரத்தை தனதாக்கி கொள்ளும் தனித்துவமான நிலையில் தமிழகம் உள்ளது.
ஆனால்,உலகளவில் நம்மை நேசிக்கும் தமிழர்கள் உள்ளதால் அவர்களுடன் இணைந்து செயல்பட்டால் சாத்தியமாகும்.தமிழகத்தின் முதல செயற்கை நுண்ணறிவு பல்கலை ஏற்படுத்தி,உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் புதுமையாளர்களை ஈர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுக்கான ஏஐ நகரங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.
மதுரை, சேலம், திருச்சி, கோவையில் ஆயிரம் டீப் டெக் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையம் அமைக்கப்படும்.இதற்காக தவெக அரசு, செயற்கை நுண்ணறிவு அமைச்சகத்தை உருவாக்கும்.
தமிழகத்தின் இறையாண்மை செழிப்புள்ள நாடாக மாற்றுதல். தமிழகத்தின் வருவாய் நன்றாக வருகிறது. ஆனால், அதை விட அதிகம் செலவாகிறது.தமிழகத்தின் கடன் 10.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் நாம் வாங்கியதை விட இந்த 5 ஆண்டுகளில் அதிகம் வாங்கப்பட்டுள்ளது. இப்படியே தொடர்ந்து செல்ல முடியாது.வட்டிக்கு செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் நமது குழந்தையின் கல்வி, நம் குடும்பத்தின் மருத்துவம், கிராமச்சாலையில் இருந்து திருடப்பட்ட ஒரு ரூபாய்க்கு சமம்.தமிழகத்தை ஆண்ட ஒவ்வொரு கட்சியும் நம்மிடம் எங்களால் இதை சமாளிக்க முடியவில்லை என்று தான் கூறியுள்ளது. ஆனால் தவெகவின் பதில் மற்ற கட்சிகளிடம் இருந்து வேறுபட்டது
தமிழக அரசால் தமிழக மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம். மக்களிடம் வரியாக ஒரு ரூபாய் கூட பெறாமல் அதிக வருவாய் ஈட்டி முறையாகவும், குறைவாகவும் செலவிட்டு முற்றிலும் புதிய வருவாய் வரும் வழிகளை உருவாக்குவதே நமது இலக்காகவும், பதிலாகவும் இருக்கும்.இப்படி ஒரு ஆட்சி நமக்கு தேவைதானே.
இருமுனை
இதுவரை நம்மை ஏமாற்றிய அனுபவசாலிகள் ஆட்சி போதும்தானே.ஏப்.23ம் தேதி அனைவரும் தயாராகி வீட்டில் சாமி நன்றாக கும்பிட்டுவிட்டு, பக்கத்துவீடு எதிர் வீடு, நண்பர்கள் மற்றும் தோழர்கள் சந்தோஷமாக முதல் ஆளாய் பூத்தில் வரிசையில் நின்று விசில் சின்னத்தை அழுத்துங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்கான தேர்தல். அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக மட்டும் வந்துள்ளேன். ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை ஏமாற்ற மாட்டேன்.
இங்கு 4 முனை, 40 முனை போட்டி எத்தனை முனை போட்டி என உருட்டினாலும் இங்கு 2 முனை போட்டி தான். ஒன்று தவெக, இன்னொன்று திமுக.மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா?.மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா?
ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள். விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.
சைக்கிள் பிரசாரம்
கன்னியாகுமரியில் தவெக தலைவர் விஜய் இன்று ரோடு ஷோ நடத்தினார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து வாகனத்தில் நெல்லை வழியாக கன்னியாகுமரி வந்தார்.
