நாங்களும் விஜய் ரசிகர்கள் தான் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் நேற்று முன்தினம், தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரக் கூட்டங்களுக்கு ரசிகர்கள் செல்லத்தான் செய்வர். நாங்களும் விஜய் ரசிகர்கள் தான். ஓட்டு போடும் போது அந்தந்த கட்சிகளுக்கு என ரசிகர்கள் ஓட்டு போடுவர். திருச்செந்துார் தொகுதியில் த.வெ.க., வேட்பாளர் டிபாசிட் பறிபோய்விடும்.
பா.ஜ.,வால் அனுப்பப்பட்ட ஒரு வேட்பாளர் மாதிரி தான் விஜய். அவர் சிறுபான்மை இன மக்கள் ஓட்டுகளை பிரிப்பதற்காக திட்டமிட்டு வந்துள்ளார். ஆனால், சிறுபான்மை இன மக்கள் ஏமாற மாட்டார்கள். அவர்கள் நன்கு படித்தவர்கள் என்பதால், ஒட்டுமொத்தமாக மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஓட்டு போடுவர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் விழாது. காலில் விழுந்து வந்த அவர், காலை வாரி விட்டதால் அவருக்கு முக்குலத்தோர் ஓட்டு போட மாட்டார்கள். பா.ஜ., தான் மத்தியில் ஆட்சியில் உள்ளது.
அவர்களது கட்டுப்பாட்டில் தான் சினிமா உள்ளது. ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் விஜய், அதை பற்றி பேசாமல் தி.மு.க.,வை ‘அட்டாக்’ செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
