அமரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இருதரப்பிற்கும் இடையிலான இந்த தாக்குதல் சம்பவங்கள் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
இந்த பதற்றமான சூழலில் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து குறைத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இந்த ஹார்மோஸ் நீரிணை பாதையை 48 மணி நேரத்தில் திறந்துவிடாவிட்டால், ஈரான் நாட்டின் மின் நிலையங்களைத் தாக்கி அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, ஐந்து நாட்கள் மீது ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாமென தன் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று (24-03-26) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ” ஈரானின் ராணுவத் தளவாடங்களை நாங்கள் அழித்துவிட்டோம். ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க மாட்டார்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். நாங்கள் போரில் வெற்றி பெற்றுவிட்டோம். அவர்கள் அமெரிக்காவிற்கு விலை மதிப்பு மிக்க பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளனர். ஈரானுக்கு எதிரான போர் குறித்துச் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
