வணிக சிலிண்டர் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை முதல் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வீட்டு சிலிண்டர்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு முதல் எட்டு நாள்கள் கழித்து டெலிவரி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மும்பையில் ஹோட்டல் நடத்தி வரும் அன்னு ஷெட்டி கூறுகையில்,”வணிக எல்பிஜி சிலிண்டர்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. சில இடங்களில் அது கிடைக்கிறது, ஆனால் ரூ.1,750 விலையில் உள்ள சிலிண்டர் ரூ.1,950க்கு விற்கப்படுகிறது” என்று அவர் கூறினார். சில ஹோட்டல்கள் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றன.
பெங்களூருவிலும் இதே நிலைதான் இருக்கிறது. இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், ”எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதால், நாளை முதல் ஹோட்டல்கள் மூடப்படும். சிலிண்டர் பற்றாக்குறை சாதாரண மக்கள், மாணவர்கள் மற்றும் தினசரி உணவுக்காக ஹோட்டல்களை நம்பியிருக்கும் மருத்துவ நிபுணர்களை பாதிக்கும்” என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சந்த சங்கத்தின் தலைவர் பி.சி.ராவ் கூறுகையில்,”பற்றாக்குறை தொடர்ந்தால் ஹோட்டல் உரிமையாளர்கள் ஹோட்டல்களை மூடுவதை தவிர வேறு வழியில்லை.
எரிவாயு இல்லாமல், நாளை முதல் ஹோட்டல்களில் உணவு மற்றும் சிற்றுண்டி கிடைக்காது. ஹோட்டல்கள் திறக்கப்படாது. நாங்கள் மத்திய அமைச்சர்களிடமும், பெங்களூருவைச் சேர்ந்த எம்.பி.க்களிடமும் பேசி தகவல் அனுப்பியுள்ளோம். எரிவாயு இல்லாமல், உணவு தயாரிக்க முடியாது, எனவே அரசாங்கம் உடனடியாக இதில் தலையிடவேண்டும்.” என்று கூறினார். இதே போன்று சென்னை, டெல்லி போன்ற நகரங்களிலும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், இந்தியா தனது எல்பிஜி இறக்குமதிக்கு 85% நம்பியிருக்கும் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு வரவேண்டிய எரிவாயு வரவில்லை.
