நாட்டில் பிரசவ கால தாய் இறப்பு விகிதம் 77% குறைந்தது: சர்வதேச ஆய்வில் தகவல்

புதுடில்லி: நாட்டில் பிரசவ காலத்தில் தாய் இறப்பு விகிதம், 1990 உடன் ஒப்பிடுகையில் 2023ல் 77 சதவீதம் குறைந்துள்ளதாக, ‘லான்செட்’ சர்வதேச மருத்துவ இதழில் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலையின் சுகாதார அளவீடு பிரிவு மற்றும் உலகின் பிற சுகாதார அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பிரசவ கால தாய் இறப்பு விகிதம் குறித்து ஆய்வு செய்தனர்.

இதன் முடிவுகள், ‘லான்செட்’ என்ற சர்வதேச மருத்துவ இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதன் விபரம்:

கடந்த 2023ல் உலகளவில் பிரசவ காலத்தில் தாய் இறப்பு எண்ணிக்கை 2.40 லட்சம். இது, 1 லட்சம் பிரசவத்தில் 190 பெண்கள் இறந்ததை குறிக்கிறது. இந்த விகிதம் 1990ல் 1 லட்சம் பிரசவங்களுக்கு 321 ஆக இருந்தது. தற்போது மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் குறைந்துள்ளது.

இருப்பினும், 1 லட்சம் பிரசவங்களில் 70க்கு கீழ் தாய் இறப்பு விகிதத்தை குறைக்க இலக்கு உள்ளது. இதை மொத்தமுள்ள 204 நாடுகளில் 104 நாடுகள் இன்னும் எட்டவில்லை.

பிரசவகால ரத்தப்போக்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் உலகளவில் தாய் மரணங்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

கடந்த 1990ல் இந்தியாவில் 1 லட்சம் பிரசவங்களில் 508 பெண்கள் இறந்தனர். 2023ல் இந்த விகிதம் 116 ஆக குறைந்தது. 1990 உடன் ஒப்பிடுகையில் இது 77 சதவீதம் குறைவு.

தாய் பலி எண்ணிக்கை 1990ல் பாகிஸ்தானில் 1 லட்சம் பிரசவங்களுக்கு 10,300, எத்தியோப்பியாவில் 11,900 மற்றும் நைஜீரியாவில் 32,900 ஆக பதிவாகியுள்ளது.

கர்ப்ப கால பரிசோதனை, அவசர சிகிச்சை மற்றும் பிறப்பிற்குப் பிந்தைய கண்காணிப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டால், தாய் மரணங்களை மேலும் குறைக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘நம் நாட்டின் 2021 – 23 தேசிய தரவின்படி, பிரசவ காலத்தில் தாய் இறப்பு விகிதம் 1 லட்சத்திற்கு 88 ஆக மேலும் குறைந்துள்ளது. 2030க்குள் இந்த எண்ணிக்கை ஐ.நா., சபை நிர்ணயித்த 70க்குள் குறைக்கப்படும்’ என்றனர்.

Source link