தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தத்தம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜகவும் தீவிரமாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 27 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, தொகுதி பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மயிலாப்பூர், ராசிபுரம், தளி, உதகை, குளச்சல், அவினாசி, சாத்தூர், நாகர்கோவில், ஆவடி, திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டிருப்பினும், வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டும் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளார்.
இன்று (27-03-26) கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். நான் சாத்தூரில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் முன்னாள் மாநில தலைவர் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
அதிமுக இந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் முனைப்பில் இருப்பதால், தேர்தல் பிரச்சாரம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட செயல்பாடுகளில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இதனால், அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
