உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் ஞானேந்திர குமார் சர்மா. ஓய்வு பெற்ற நீதிபதியான இவருக்கு, பிரணிதா வஷிஸ்டா என்ற மகள் உள்ளார். இவருக்குக் கடந்த 2018 ஆம் ஆண்டு ஷாஜகான்பூரை சேர்ந்த ராணுவ மேஜருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், பிரணிதா கணவர் வீட்டில் தனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தல் இருந்ததாகக் கூறி, மீரட் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம், சனிக்கிழமையன்று (04-04-26) அவருக்கு விவாகரத்து வழங்கியது.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்த பிரணிதாவிற்கு அவரது குடும்பத்தினர் மேள தளங்களுடன் வரவேற்பளித்தனர். அதோடு மட்டுமல்லாமல், நடனமாடி அவரை ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அது மட்டுமல்லாமல், அவர்களது சட்டைகளில் “நான் எனது மகளை நேசிக்கிறேன்” என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும், ஞானேந்திர குமார் தன் மகளுக்கு மாலைகள் அணிவித்து வரவேற்றார். அதோடு, உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இது குறித்து ஞானேந்திர குமார் கூறுகையில், “எனது மகள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அந்த சூழலில் இருந்து வெளியே கொண்டுவருவது என்னுடைய கடமையாகும். நாங்கள் இந்த வழக்கில் ஜீவனாம்சமோ அல்லது வேறு எந்த பிரதிபலனோ கோரவில்லை. பெண்கள் என்பவர்கள் உடைமைகள் அல்ல. எனவே, சமூக எதிர்பார்ப்புகளை விட அவர்களின் கண்ணியம் மற்றும் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
அடுத்ததாக பிரணிதா கூறுகையில், “திருமண உறவில் மனதளவில் பலவீனமடைந்து இருந்தேன். துன்புறுத்தல்கள் மற்றும் அவதூறுகளை எதிர்கொள்ளும் பெண்கள் மௌனமாக இருக்க வேண்டாம். உங்களுக்காக நீங்களே எழுந்து நில்லுங்கள். திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன்பு வலிமை பெறுங்கள், கல்வியறிவு பெறுங்கள், சுதந்திரமாக இருங்கள்” என்று தெரிவித்தார்.
