'நான் சொன்னது 'ஆல் பினிஷ்' அல்ல': முதல்வர் ஸ்டாலின் 'கல கல'

– நமது நிருபர் –

அமைச்சர் மகேஷ் இல்ல திருமண விழா தஞ்சாவூரில் நேற்று நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

காங்கிரசுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்து, காரில் ஏறியபோது, ‘ஓவர்’ என கையை அசைத்தேன். அந்த ‘ஆக்ஷனை’ சமூக வலைதளங்கள் வாயிலாக பார்த்திருப்பீர்கள். அது திட்டமிட்டு செய்ததல்ல. காரில் ஏற வந்தபோது, கூடியிருந்த பத்திரிகையாளர்கள், ‘முடிந்து விட்டதா?’ என கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக, ‘ஓவர்’ என கையால் ஆக்ஷன் காட்டி பதில் அளித்தேன்.

அதை வைத்து, ‘ஆல் பினிஷ்’, அதாவது, ‘அனைத்தும் முடிந்து விட்டது’ என நான் சொன்னது போல வைரலாக்கி விட்டனர். நடந்த சம்பவத்துக்கு இது தான் என் விளக்கம். கூட்டணி கட்சியினரை திருப்திபடுத்தும் வகையில், இரு கட்சிகளுக்கு ராஜ்யசபா எம்.பி., வாய்ப்பை அளித்திருக்கிறோம்.

மறைந்த அமைச்சர் தர்மலிங்கம், தலைவர் கருணாநிதிக்கு பக்கபலமாக இருந்தார். தர்மலிங்கம் வழிவந்த என் நண்பன் பொய்யாமொழி, எனக்கு உதவிக்கரமாக இருந்தார். தற்போது மகேஷ், உதயநிதிக்கு பக்கபலமாக இருக்கிறார். இந்த குடும்ப உறவு, உதயநிதி – மகேஷுடன் நிற்காது. அவர்களுடைய மகன்கள் இன்பன் – இனியன் என வாழையடி வாழையாக தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link