காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியினர் மத்தியில் வேட்பாளரை அறிமுகபடுத்தும் செயல்வீரர்கள் கூட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வேட்பாளரை அறிமுகபடுத்தி பேசுகையில் ”என் மேல் என் கட்சி தொண்டர்களுக்கு பெரும் வருத்தம் உள்ளது. கட்சியில் வேர்வை சிந்தி உழைத்தோம். ஆனால் நமக்கு சீட் வழங்கவில்லை என்ற வருத்தம் அனைவருக்கும் உள்ளது.
இதே தொகுதியை சேர்ந்த ஒருத்தருக்கு கொடுத்து இருக்கிறார்கள் பரவாயில்லை. ஆனால் கட்சியை சார்ந்த எங்களுக்கு கொடுத்திருக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். உங்கள் வருத்தத்தில் நியாயம் உள்ளது. உங்களின் வலிகளை என்னால் உணர முடிகிறது. என்னை உறங்க விடுவதே மூன்று மணிநேரம் தான் என்று நான் அடிக்கடி கூறி வருகிறேன். ஆனால் இப்பொழுது அந்த நேரம் கூட தூங்க முடியவில்லை என எனக்கு வலி அதிகமாக உள்ளது.
சட்டமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என்று நான் எடுத்த முடிவு சரியோ, தவறோ. நான் போட்டியிடப் போகின்றேன் என்று யாருக்கும் சொல்லவில்லை. அண்ணன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை முதல் நாள் சந்தித்து பேசினேன். ஆனால் அவருக்கு சொல்லாமல் நான் போட்டியிடப் போகிறேன் என்று சொன்னது அவருக்கு அதிர்ச்சி அளித்தது.
நான் எங்கு வேண்டுமானாலும் நின்றிருக்கலாம் ஏன் நான் காட்டுமன்னார்கோவில் தொகுதியை தேர்ந்தெடுத்தேன். விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் போட்டியிடும் பாதையில் ஒவ்வொரு முறையும் சவால்கள் சிக்கல்களை சந்திக்கின்ற வேலைகளை கூட்டணி கட்சியினர் பார்த்து வருகின்றனர்.
நான் மூன்றுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக வென்றுள்ளேன் என்றால் அதற்கு திமுக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களின் முழு ஒத்துழைப்பு உள்ளது. நிற்க வேண்டியது தானே நீங்கள் ஏன் பின் வாங்கினீர்கள் என்றால் அதுதான் பிரச்சனை. அண்ணன் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம் என்னை சந்தித்தபோது அவர் கூறிய கருத்துக்கள் என்னை சிந்திக்க வைத்தது. வேறு எந்த ஒரு அர்த்தமும் எனக்கு கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு செலவு ஆகும். ஏன் மீண்டும் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என மக்கள் யோசிப்பார்கள்.
அதனாலயே இதையெல்லாம் நான் உணர்ந்தேன். சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மீண்டும் இந்த பகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் நடைபெறும். யாரோ ஒருவரை வேட்பாளராக நிறுத்துவேன். அப்போது அண்ணன் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்தை அழைத்துக்கொண்டு போக வேண்டும். இதையெல்லாம் சிந்தித்து நான் முடிவெடுத்தேன்” என்றார்.
