‘நாம் தமிழரின் முதல் தேர்தல்… கலைஞர், ஜெ.வின் கடைசித் தேர்தல்’- களத்தை வலுவாக்கிய ‘2016’

ஆட்சி, அதிகாரம், அரசியல் ஸ்திரத்தன்மை என எல்லாவற்றையும் உறுதி செய்யும் இறுதி நாளாக தேர்தல் உள்ளது. அப்படிப்பட்ட தேர்தலாக வரும் 2026 சட்டமன்ற தேர்தல் முக்கிய கவனம் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தேதியில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நேரத்தில் தமிழகத்தில் சூடு பறக்க நடந்த முந்தைய தேர்தல் களங்களை திரும்பி பார்க்க வைக்கும் முயற்சி தான் ‘தமிழ்நாடும் தேர்தலும்’

 கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் கடைசி தேர்தல்

11 கட்சிகள் கொண்ட அதிமுகவின் கூட்டணி பலம் ஒருபுறம், மறுபுறம் திமுக ஆட்சியில் நிலவிய மின்வெட்டு, விலைவாசி உயர்வு, திமுக மீதான 2ஜி ஊழல் குற்றச்சாட்டு என பல்வேறு காரணிகள் 2011 தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணமாகின. இதனால் 2011-ல் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. அதனைத்தொடர்ந்து அடுத்து நடைபெற்ற 2016 தேர்தலும் மீண்டும் அதிமுகவிற்கே கை கொடுத்தது.

2016 தேர்தல் திமுக, அதிமுக என்ற இரண்டு பிரதான கட்சிகளின் வரலாற்று பெருமைமிக்க தலைமைகளான கலைஞர், ஜெயலலிதா போட்டியிட்ட கடைசித் தேர்தலாக ஆகிப்போனது. அதிமுக, திமுக போனமுறை பிரமாண்ட கூட்டணிகளை அமைத்திருந்த நிலையில் 2016 தேர்தலில் சிறு சிறு கட்சிகளோடு மட்டுமே கூட்டணி அமைத்திருந்தது. காரணம் 2016-ல் ‘மக்கள் நலக் கூட்டணி’ என்ற மூன்றாவது அணி அமைந்திருந்தது.

அதிமுக சிறிய கட்சிகளுடன் இணைந்து தனது ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே 234 தொகுதிகளில் போட்டியிட்டு 134 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனால் தொடர்ந்து இரண்டாவது முறை அதிமுக ஆட்சியமைக்கும் பெருமையை பெற்றது.  

திமுக கூட்டணி 98 இடங்களை வென்று, தமிழக தேர்தல் வரலாற்றிலேயே அதிக இடங்களை கொண்ட பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இந்த தேர்தலில் திமுக 178 இடங்களில் போட்டியிட்டு  89 இடங்களில் வென்றது. திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வென்றது.

மறுபுறம் மூன்றாவது அணியாக தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து அமைத்த ‘மக்கள் நலக் கூட்டணி’ என்ற அணி உருவானது. அந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் தோல்வியடைந்தது.

அதேபோல் இந்த தேர்தலில் பாமக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தனியாக போட்டியிட்டன. அதிலும் குறிப்பாக சீமானின் ‘நாம் தமிழர்’ அமைப்பு கட்சியாக மாற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட முதல் தேர்தல் 2016 தேர்தல் ஆகும். முதல் தேர்தலில் நாம் தமிழர் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 1.1சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது.

இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா புகார்கள் அதிகரித்ததன் விளைவாக கரூரின் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் அக்டோபர் மாதம் நடைபெற்றது.   

 

Source link