கடந்த அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ள இரண்டு தனித் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேர்தல் நடத்தப்பட்டது. முன்னதாக தவெக வேட்பாளர் சத்யா பாமாவை ஆதரித்து தாராபுரத்தில் பரப்புரை மேற்கொள்வதற்காக முதல்வர் விஜய் வருகை தந்திருந்தார். அந்த சமயத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்ட கார்த்திகா முதல்வர் வாகனத்தை முற்றுகையிட முயன்றார். இதனால் பாதுகாப்பு காரணங்கள் கருதி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கார்த்திகா மீது வழக்குபதிவு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
கார்த்திகாவின் கைதுக்கு பின்னால் இருக்கும் அரசியல்
இந்த நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், நாதகவுக்கு ஆதரவாக திமுக தலைமை மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆதரவு குரல் எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
குறிப்பாக, எந்த ஓர் ஆணும் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியமே கிடையாது. அண்ணனாகவும் இருக்க வேண்டாம், யாராகவும் இருக்க வேண்டாம். சீர் கொடுக்கிறேன் எனப் பெண்களை ஏமாற்றியதெல்லாம் போதும். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் என தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி விமர்சனம் செய்துள்ளார்.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்தியத் தண்டனைச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின் அடிப்படையில் முதல்வரின் கான்வாய் வாகனங்களை மறிப்பதும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுக்கும் சட்டவிரோதமான குற்றங்களாகும். இத்தகைய குற்றங்களுக்காகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கார்த்திகா கைது செய்யப்பட்டார். சட்டப்பூர்வமாக முதல்வரின் கான்வாய் செல்லும் பாதை முன்கூட்டியே ஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் வகையில் முதல்வரின் கான்வாய் 5 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் எங்கும் நிற்கக் கூடாதுஎன்பது முக்கிய விதிமுறையாகும். இத்தகைய சூழலில், நாட்டின் முதன்மைப் பிரதிநிதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கான்வாயை மறித்த செயல் தீவிரமான குற்றமாகக் கருதப்படுகிறது.
திமுகவின் பலே மாஸ்டர் பிளான்
– இருப்பினும், கார்த்திகாவின் கைதை எதிர்த்து திமுக தரப்பிலிருந்து வழக்கத்திற்கு மாறாக ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கார்த்திகாவின் கைதுக்கு ஆதரவாக பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
– ஏற்கனவே திமுகவைச் சார்ந்த பெண் நிர்வாகி சுதா தீனதயாளன் முதல்வர் குறித்துப் பேசியபோது கண்டனம் தெரிவிக்காத திமுக தலைமை,தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கைதை எதிர்ப்பதற்குப் பின்னால் பெரிய அரசியல் கணக்குகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
– வரவிருக்கும் மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் தவெகவை எதிர்கொள்ளும் நோக்கில், திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிட கட்சிகளும் இணைந்து சீமானைப் பொது வேட்பாளராக நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
– தவெகவின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இத்தகைய வியூகங்களை வகுத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது.
-அரசியலில் ஜென்ம எதிரிகளாக இருந்து வந்த திமுகவும் அதிமுகவும் தற்போது ஒரே புள்ளியில் இணைந்து சீமானுக்கு ஆதரவு அளிப்பது போன்ற சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்பதும், இந்த வியூகம் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் பலன் தருமா என்பதும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும்.
