தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில், நாளை அதிகாலை கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோரா மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கலாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதால், மழையின் தீவிரத்தைப் பொறுத்து இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்டதாகவும், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இதனால் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அவர் தெரிவித்திருக்கிறார். இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணித்திருக்கிறார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வரும் சூழலில், இரவு நேரத்தில் காற்று திசை மாறி, பரவலாக மழை பெய்யும் என அவர் கணித்திருக்கிறார்.
கடலூர் முதல் புதுக்கோட்டை வரை
மேலும், இன்று நள்ளிரவு தொடங்கி கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஏழு மாவட்டங்களிலும் வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம் மற்றும் பாண்டி ஆகிய பகுதிகளிலும்அதிகாலை வரை கனமழையை எதிர்பார்க்கலாம் என அவர் கூறியிருக்கிறார்.
தென் மாவட்டங்களிலும் பரவலான மழைக்கு வாய்ப்பு
மாவட்டங்களில் எங்கு மழை பெய்யும் என்பது தொடர்பாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை பகல் வரை பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்திருக்கிறார்.
மேற்கு மாவட்டங்களிலும் மழை தொடரும்
இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் நாளையும் அதற்கு அடுத்த நாளும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்திருக்கிறார்.
Source link
