நாளை கடலுாரில் விஜய் பிரசாரம் : உதயநிதிக்கு அனுமதி மறுப்பு

– நமது நிருபர் –கடலுாரில் ஒரே நாளில், த.வெ.க., தலைவர் விஜய்க்கும், துணை முதல்வர் உதயநிதிக்கும், தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்தால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால், முதலில் விண்ணப்பித்த விஜய்க்கு அனுமதி வழங்கி, உதயநிதிக்கு மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ம் தேதி, கடலுார் மாவட்டத்தில், மஞ்சக்குப்பம், வடலுார், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி போன்ற இடங்களில், விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், புதுச்சேரி மாநில தேர்தல் அன்று நடந்ததால், புதுச்சேரியில் இருந்து சாலை மார்க்கமாக, கடலுார் செல்ல விஜய் திட்டமிட்டிருந்தார்.

புதுச்சேரியில் தேர்தல் நடந்ததால், அங்கு மத்திய படை போசலீசார், உள்ளூர் போலீசார், முழு பாதுகாப்பில் ஈடுப்பட்டிருந்தனர். எனவே, விஜய் பிரசாரத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் கடலுார் – புதுச்சேரி எல்லைப் பகுதியில், போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு அச்சறுத்தல், கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதால், அவரது பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதேபோல், கடலுார் மாவட்டத்தில், உதயநிதி நாளை பிரசாரம் செய்ய போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீஸ் தரப்பில் விஜய் முதலில் அனுமதி கேட்டதால், அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு வேறு தேதியில், அனுமதி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுாரில் தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், செல்வாக்குடன் இருப்பது போல், த.வெ.க.,வுக்கும் செல்வாக்கு இருக்கிறது. இதனால், தி.மு.க., மற்றும் த.வெ.க.,வினர் தங்கள் பலத்தை காட்ட, மல்லு கட்ட உள்ளனர். விஜய் பிரசாரத்திற்கு, நாளை அனுமதி வழங்கப்பட்டாலும், ரோடு ஷோ நடத்தக் கூடாது, ஹெலிகாப்டரில் வரக்கூடாது எனப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Source link