சென்னை: ”பீஹாரில் நிதிஷ்குமாருக்கும், மஹாராஷ்டிராவில் சரத் பவாருக்கும் ஏற்பட்ட நிலைதான், இபிஎஸ்க்கும் நேரிடும்,” என, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: ஒருகாலத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலரை சந்திக்க, அவர் வீட்டு வாசலில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் காத்திருப்பர். ஆனால், இன்று அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ், ஒவ்வொரு முடிவையும் எடுக்க டில்லி சென்று வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தினகரனும், அன்புமணியும் தனித்தனியே டில்லி சென்று வந்ததோடு, தங்கள் பிரச்னைகளை டில்லி தான் சரிசெய்யும் என, வெளிப்படையாகவே கூறினர். இப்படி இருக்கையில், நல்லுறவுடன் திகழும் தி.மு.க., கூட்டணியை பழனிசாமி விமர்சிக்கிறார். தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்கள் அடிமைகளாக இருப்பதாக அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் நோட்டாவுக்கும் குறைவாக ஓட்டுக்கள் பெற்ற தாமரைக்கு, கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளை கொடுத்துள்ளார் பழனிசாமி. வரும் காலத்தில் பீஹாரில் நிதிஷ்குமாருக்கும் மஹாராஷ்டிராவில் சரத்பவாருக்கும் ஏற்பட்ட நிலைதான், இபிஎஸ்க்கும் நேரிடும். கோவாவில் பா.ஜ.,வால் விழுங்கப்பட்ட மாநில கட்சிகளின் நிலை தான், அ.தி.மு.க.,வுக்கும் ஏற்படும்.
முதலில் அ.தி.மு.க. தொண்டர்களின் சுயமரியாதையை, அவர் காப்பாற்ற வேண்டும். இபிஎஸ் என்னதான், ‘மேக்கப்’ போட்டு மறைத்தாலும், அவரது ஒவ்வொரு அறிவிப்புக்கும் பின்னால், மத்திய அமைச்சர் அமித்ஷா தான் இருக்கிறார். மீண்டும் மீண்டும் அவர் டில்லிக்கு அடிபணிந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
