வெலிங்டன்: பெண்களுக்கான ஒருநாள் போட்டியில் அதிக ரன்னை ‘சேஸ்’ செய்து வரலாறு படைத்தது நியூசிலாந்து.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. வெலிங்டனில் 2வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்க அணிக்கு அன்னெகே பாஷ் (91), கேப்டன் லாரா (69), டிரையன் (52*), சுனே லுஸ் (40) கைகொடுக்க, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 346 ரன் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் பிரீ இல்லிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் அமேலியா கெர் (179*) சதம் கடந்து நம்பிக்கை தந்தார். இவருக்கு, இசபெல்லா காசே (68) ஒத்துழைப்பு தந்தார். நியூசிலாந்து அணி 49.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 350 ரன் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதிய வரலாறு
பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக ரன்னை (350/8) ‘சேஸ்’ செய்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது நியூசிலாந்து. இதற்கு முன், கடந்த ஆண்டு நவி மும்பையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு (338/10) எதிரான போட்டியில் இந்திய அணி 341/5 ரன்னை விரட்டியது சாதனையாக இருந்தது.
