ஆக்லாந்து: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ‘டி-20’ போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. ஆக்லாந்தில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (15), கானர் எஸ்டர்ஹுய்சன் (15), ஜேசன் ஸ்மித் (10) சோபிக்கவில்லை. கேப்டன் கேஷவ் மகாராஜ் (3) ஏமாற்றினார். ஜார்ஜ் லிண்டே (23), தியான் (17), மொகோனா (26*) ஆறுதல் தந்தனர். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 136/9 ரன் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கான்வே (39), டாம் லதாம் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. டிம் ராபின்சன் (17) நிலைக்கவில்லை. கேஷவ் மகாராஜ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய லதாம், 45 பந்தில் அரைசதம் கடந்தார். நியூசிலாந்து அணி 16.2 ஓவரில் 137/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. லதாம் (63 ரன், 2X6, 7X4), நிக் கெல்லி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
நியூசிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் பெர்குசன் (4 ஓவரில், 9 ரன், ஒரு விக்.,) வென்றார்.
