நியூயார்க்: ஈரானுடனான போரில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று அதிபர் டிரம்ப்புக்கு அவருடைய

நியூயார்க்: ஈரானுடனான போரில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று அதிபர் டிரம்ப்புக்கு அவருடைய ஆலோசகர்கள் அழுத்தம் தர தொடங்கியுள்ளனர்.

மேற்காசிய நாடான ஈரான் மீதான போர், 11வது நாளாக தொடர்ந்தது. இந்தப் போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் கச்சா எண்ணெய் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண் ணெய் விலை அதிகரித்து, அமெரிக்காவில் பொருளாதார அழுத்தம் அதிகரித்து வருகிறது. அங்கும், பெட்ரோல், டீசல் விலை பெரும் உயர்வைக் கண்டுள்ளது.

இது அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போர் நீடித்தால் அரசியல் ரீதியான பின்னடைவு ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்தாண்டு இறுதியில் பார்லிமென்ட் செனட் சபையின் 50 சதவீத இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர், இந்தப் போருக்கு எதிராக உள்ளனர். இதனால் டிரம்பின் குடியரசுக் கட்சி ஆதரவாளர்களிடையேயும் ஆதரவு சரிய ஆரம்பித்துள்ளது. இது தேர்தல்களில் பெரும் பிரச்னையாக மாறும் என்று அவரது கட்சி எம்.பி.,க்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் சமீபத்தில் பேசிய போது, போர் விரைவில் முடிவடையும் என்றும், ராணுவம் பெரும்பாலான இலக்குகளை அடைந்து விட்டது என்றும் கூறினார். ஆனால், தேவைப்பட்டால் மேலும் தாக்குதல்கள் நடத்தத் தயார் என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து டிரம்ப்பின் மிக நெருங்கிய ஆலோசகர்கள், ஈரானுடனான போரில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதற்கான தெளிவான திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்க ராணுவம் பெரும்பாலான இலக்குகளை அடைந்து விட்டதால், இதையே வெற்றியாக சித்தரித்து வெளியேறலாம் என்று ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அமெரிக்கா-ஈரான் மோதல் விரைவில் முடிவுக்கு வருமா அல்லது நீடிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகள், குறிப்பாக எண்ணெய் சார்ந்த பொருளாதாரம் கொண்ட நாடுகள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

புடினுடன் ஆலோசனை!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நேற்று முன்தினம் இரவு தொலைபேசி வாயிலாக பேசினார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த பேச்சின்போது, ஈரான் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்த திட்டத்தை டிரம்ப் பகிர்ந்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே, நான்கு ஆண்டுக்கு மேலாக நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

Source link