சென்னை: கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக நீக்கப்பட்ட நிர்வாகிகள், மீண்டும் தமிழக பா.ஜ.,வில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளராக ஏ.என்.பிரசாத் என்பவர் இருந்தார். ‘த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து வந்த நிலையில், ‘பா.ஜ., கூட்டணியில் த.வெ.க., இணைய வேண்டும்’ என, பிரசாத் அழைப்பு விடுத்தார்.
இதனால் கடந்த மாதம், கட்சி பொறுப்புகளில் இருந்து பிரசாத் நீக்கப்பட்டார். தற்போது, சட்டசபை தேர்தல் பிரச்சாரம் துவங்கியுள்ளது. இந்நிலையில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய விருப்பம் தெரிவித்து, மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், பிரசாத் நீக்கத்தை ரத்து செய்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு அமைப்பாளர் சென்னை சிவா உட்பட, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பல நிர்வாகிகள், மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, பிரசாத் கூறியதாவது:
நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானபோது, மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், மீண்டும் எனக்கு பொறுப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
என்ன தவறுக்காக என்னுடைய பொறுப்பை பறித்தீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், நான் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அதை ஏற்று பொறுப்பை திரும்ப வழங்கியதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
நான், கட்சி தலைவருக்கு மன்னிப்பு கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. தலைமையின் தவறான திடீர் முடிவால், ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் எனக்கு, தற்போதைய அறிவிப்பு கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
