சென்னை: ”வேறு ஒரு பெண்ணிடம் பேசினால், மனைவி உங்கள் பேச்சை கேட்பார்,” என, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில், ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம் பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தல் விழா, சென்னை வேப்பேரியில் நேற்று நடந்தது. இதில், 500 ஜோடி மூத்த தம்பதியினர் பங்கேற்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து, சீர்வரிசை தாம்பூலம் கொடுத்து, சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, மூத்த தம்பதியினருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், சுகி சிவம் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினிடம் தெரிந்து கொள்ள ஒரு விஷயம் உள்ளது. அவரது மனைவி துர்கா, கோவில் கோவிலாக செல்கிறார். முதல்வர் ஸ்டாலின், கோட்டை கோட்டை என செல்கிறார்.
கோவிலுக்கு வருவேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறவில்லை; கோட்டைக்கு வருவேன் என்று, துர்கா கூறவில்லை. இதுபோல், ஒவ்வொருவரும் தன் துணை விஷயத்தில் தலையிடாது இருந்தால், கடைசி வரை ஒற்றுமையாக வாழலாம்.
மனைவியை துணி கடைக்கு அழைத்து செல்கிறீர்கள். அவர் நீண்ட நேரம் துணி எடுத்துக் கொண்டிருக்கிறார். துணி தேடிக் கொண்டே உள்ளார். அவர்களுக்கு அங்கேயும், ‘மேட்ச்’ கிடைக்கவில்லை.
ரொம்ப நேரமாகியும், உங்கள் மனைவி இன்னும் வரவில்லையா? அவரை வரவழைக்க ஒரு வழி உள்ளது. வேறு ஒரு பெண்ணுடன் பேசுங்கள்; எங்கிருந்தாலும் மனைவி வந்து விடுவார். இது தான் பெரிய ரகசியம்.
இது ராமாயணத்திலேயே உள்ளது. சூர்ப்பனகையுடன் ராமர் பேசுகிறார். பெண்ணுடன் என்ன பேச்சு என, உள்ளிருந்து சீதை வந்து விடுவார். இனிமேல், உங்கள் பேச்சை கேட்டதும், மனைவி வர வேண்டுமெனில், வேறு பெண்களுடன் பேச வேண்டும். இதுவே என் டிப்ஸ்.
கணவனுக்காக பெண்கள், ‘அந்த விரதம் இருக்கிறேன், இந்த விரதம் இருக்கிறேன்’ என்கின்றனர். நான் கூறுகிறேன், ஒரே ஒரு விரதம் இருந்தால், ஆண்கள் 100 வயது இருப்பர். மவுன விரதம் இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
