தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று முன்தினம் (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர்.சி யை ஆதரித்து அவரது மனைவியும், நடிகையுமான குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”எப்படி இருக்கீங்க என்று நான் கேட்க மாட்டேன். ஏனென்றால் கண்டிப்பாக கடந்த 10 வருடங்களாக திமுக ஆட்சியில் நீங்க நல்லா இருக்க மாட்டீங்க என்று எனக்கு நல்லா தெரியும். நான் இங்கே வருவதற்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. ஆனால் அதுக்கும் காரணம் திமுக தான். காரணம் மதுரையில இருக்கிற டிராபிக் இருக்கு பாருங்க ஒரு போக்குவரத்து கூட உங்களால சரிப்படுத்த முடியலனா ஒரு இடத்துக்கு போவதற்கு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்.
ஒரு எமர்ஜென்சி என்றால் நீங்க என்ன பண்ணுவீங்க? அவ்வளவு பிரச்சனைகள் இருக்கு. இங்கே இருக்கும் எம்எல்ஏவை உங்களால் பார்க்க முடியாது. பெரிய கேட் வைத்துள்ளார். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உங்களை பார்ப்பதற்கு அவர் தேடி வரமாட்டாரு. ஆனால் உங்க முன்னாடி உங்க வீட்டில் ஒருவராக, உங்க சகோதரனாக, உங்க மகனாக, உங்க கூட பிறந்தவனா, உங்க தம்பி என எப்படி வேணாலும் அவரை (சுந்தர்.சியை) பாருங்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு நல்லது செய்வார். அது மட்டும்தான் என்னால உறுதியாக சொல்ல முடியும். ஏன்னா 30 வருடமாக அவர் கூட குடும்பம் நடத்திட்டு இருக்கேன். ஒரு நல்ல கணவராக அவர் இருக்கிறார். ஒரு அருமையான தகப்பனா இருக்கிறாரு. 95 வயதில ஒரு அம்மாவுக்கு நல்ல மகனாக இருக்கிறார். வீட்டிலே ஒரு சிறந்த மனிதராக இருக்கும்போது உங்களை மாதிரி மக்களுக்கு நல்லது செய்யணும் என்ற ஒருநல்ல எண்ணம் நிச்சயமாக அவருக்கு இருக்கிறது” என்றார்.
