நீட் எதிர்ப்பு போராட்டம்: தலைமைச்செயலக கைது முதல் அமைச்சருடனான சந்திப்பு வரை – ராப் பாடகர் அறிவு கூறியது என்ன? – neet protest rapper arivu detained meets minister what did he say

இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த சர்ச்சைக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி சந்தர் மந்திர் பகுதியில் கடந்த 20-ஆம் தேதி முதல் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

போலீஸ் தடியடி

இந்தச் சூழலில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மாணவர்களைக் கலைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறிவு கைது !

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் காவல்துறை நடவடிக்கையை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை தலைமைச் செயலகம் முன்பு ராப் பாடகர் அறிவு உள்ளிட்ட 4 பேர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி,பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அறிவு உள்ளிட்ட நால்வரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தலைமைச் செயலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாசல் வரை வந்து வழியனுப்பிய ஆதவ்

முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க அனுமதி கேட்டதாக அறிவு தரப்பு தெரிவித்த நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மூலமாக அறிவு தலைமைச் செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் நடைபெற்ற ஆலோசனையில், நீட் எதிர்ப்பு போராட்டம், மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பு முடிந்ததும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அறிவுவை தலைமைச் செயலக வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

அறிவு எக்ஸ் தள பதிவு

இதுகுறித்து அறிவு தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், “நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். போராடும் மாணவர்களுக்குதமிழ்நாடு அரசு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி இன்று தலைமைச் செயலகம் முன்பு குரலெழுப்பினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீட்டை ரத்து செய்ய முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும்

மேலும், “நீட் தேர்வு மாணவர்களிடையே அச்சத்தையும் மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம். இந்த நிலை தொடரக் கூடாது. நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் போராடும் மாணவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Source link