புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள நீதித்துறையின் ஊழல் பாடத்தை எழுதியவர்கள் மற்றும் அந்த புத்தகத்தை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பில் சமூகஅறவியல் பாடத்தில் இடம்பெற்றுள்ள நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதயைடுத்து என்சிஇஆர்டி இதற்காக மன்னிப்பு கோரியதுடன், அந்த பாடத்தை நீக்கி உள்ளது. மேலும், இந்தவிவகாரம் குறித்துஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: நீதித்துறை மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவோம். பாடப்புத்தகம் குறித்த விவகாரம் கவலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் எனது கவனத்துக்கு வந்ததும், உரிய நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டேன். நீதித்துறையை அவமதிக்கும் எண்ணம் ஏதும் இல்லை. அரசுக்கு அதுபோன்ற நோக்கமும் இல்லை. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு உள்ளோம்.
விசாரணை நடந்து வருகிறது. இந்த புத்தகத்தை தயாரித்தவர்கள், பாடத்தை எழுதியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்பதை உறுதி செய்யநடவடிக்கை எடுக்கப்படும். நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியா போன்ற சிறந்த நாடுகளில், நீதித்துறை உயர்ந்த மற்றும் மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிறது.
அதன் உத்தரவுகளுக்கு நாங்கள் பணிய வேண்டியது அரசியலமைப்பு மற்றும் தார்மிக கடமை ஆகும். நீதித்துறையின் உத்தரவை மதிக்கவும், அதற்கு கீழ்படியவும், அரசு உறுதி பூண்டுள்ளது என்பதை 140 கோடி மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
