புதுடில்லி: ‘மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிக்கு சென்ற நீதிபதிகள் ஏழு பேர் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில், மாநில போலீசாரை நம்ப தயாராக இல்லை’ என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மீதான தாக்குதல் முயற்சி குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்., 23 மற்றும் 29ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தை விசாரித்து, அவர்களது பெயர்களை சேர்க்க உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், கொல்கட்டா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஏழு நீதிபதிகள் கடந்த வாரம் மால்டாவுக்கு சென்றிருந்தனர்.
மாலை 3:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ஏழு நீதிபதிகளையும் சிறைபிடித்து வைத்த கும்பல், உணவு, குடிநீர் கூட வழங்காமல் அவர்களை துன்புறுத்தியது. இது பற்றி தகவல் அறிந்ததும் பதறி போன உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் மாநில போலீஸ் டி.ஜி.பி., உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
அதிகார தோரணை
ஆனால், மாநில அரசு நிர்வாகம் எந்த துரும்பையும் அசைக்காததால், கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நேரடியாக தலையிட்டு, ஏழு நீதிபதிகளையும் மீட்க நடவடிக்கை எடுத்தார். எனினும், அந்த இடத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டபோது, வாகனங்கள் மீது கல்வீசியும், தடியால் அடித்தும் தாக்கினர்.
நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் நேற்று மேற்கு வங்க தலைமை செயலரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, மேற்கு வங்க தலைமை செயலர் துஷ்யந்த் நாரியாலா மற்றும் அரசு உயரதிகாரிகள், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் ஆஜராகினர்.
விசாரணையை துவக்கிய நீதிபதிகள், ”கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தார். ”ஆனால், உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதற்காக அவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என, மேற்கு வங்க தலைமை செயலர் துஷ்யந்த் நாரியாலாவுக்கு உத்தர விட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், ”சம்பவம் நிகழ்ந்த நாளன்று, டில்லிக்கு விமானத்தில் சென்றேன். விமானத்தில் தொலைபேசியை பயன்படுத்த முடியாது. தவிர, கொல்கட்டாவில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை,” என கூறினார்.
உடனடியாக குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ”மேற்கு வங்கத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்த உடனேயே, தொடர்ச்சியாக உங்களை தொலைபேசியில் அழைத்து கொண்டே தான் இருந்தனர்.
”ஆனால், டில்லியில் தரையிறங்கியபோதும் கூட, அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை. தொடர்பு கொள்வதற்கான பிரத்யேக மொபைல் போன் எண்ணை கொடுத்திருந்தால், இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில் இருந்து ஏழு நீதிபதிகளையும் உடனே காப்பாற்றி இருக்கலாம்,” என்றார்.
அதற்கு பதில் அளித்த தலைமை செயலர், ”நான் பயன்படுத்தும் தொலைபேசி எண் மிகவும் பாதுகாக்கப்பட்டது,” என கூறினார்.
இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி பக்சி, ”கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கூட தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு உங்கள் தொலைபேசி எண் அவ்வளவு ரகசியமாக பாதுகாக்கப்பட்டதா? அதிகார தோரணையில் இருந்து சற்று கீழே இறங்கி வாருங்கள்.
மன்னிப்பு
”அப்போது தான் கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி போன்ற சாதாரண மனிதர்கள் உங்களை எளிதாக அணுக முடியும். ”அன்றைய நாளில் நிகழ்ந்த தவறுக்காக தலைமை நீதிபதியிடம் நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்,” என்றார். இதையடுத்து நீதிபதிகள் முன்னிலையில், தலைமை செயலர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க அரசு நிர்வாகம் முழுதாக தோல்வி அடைந்துள்ளது. மேற்கு வங்க அரசில் பணியாற்றும் மூத்த உயரதிகாரிகள் இப்படி தான் நடந்து கொள்வார்களா? தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் அரசியல் நுழைந்துவிட்டது. இது மிகவும் வருந்தத்தக்கது.
மாவட்ட கலெக்டரும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் வன்முறை நிகழ்ந்தபோது வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொ ண்டிருந்தனர். நுாற்றுக்கணக்கில் பெண்கள் திரண்டு இருந்ததால், எதுவும் செய்ய முடியவில்லை என விளக்கம் அளிக்கின்றனர்.
திடீரென அந்த இடத்தில் எப்படி நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிடாமல் இருந்திருந்தால், நிச்சயம் அங்கு அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். வன்முறை தொடர்பாக கைதான 26 பேரையும் விசாரணைக்காக என்.ஐ.ஏ.,விடம் மாநில போலீசார் ஒப்படைக்க வேண்டும்.
வழக்கு தொடர்பான ஆவணங்களையும் தர வேண்டும். ஏனெனில் உள்ளூர் போலீசாரை நாங்கள் நம்ப தயாராக இல்லை. வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட நபரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில், இது கச்சிதமாக திட்டமிடப்பட்ட சம்பவம் போல தோன்றுகிறது.
தலைமை செயலரும், அரசு அதிகாரிகளும் இனியாவது பொறுப்புடன் செயல்படுவீர்கள் என நம்புகிறோம். கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சிறைபிடிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
தற்போதைக்கு உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிக்கு சிறப்பான ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
