நீலகிரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஆறு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மலை மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இரவு முழுவதும் கனமழை பெய்ததன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய ஆறு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கியிருக்கிறார்.
மலை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில்தான் மலை மாவட்டங்களுக்கு நேற்றைய தினம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கேரளாவுக்கு அருகே அரபிக்கடலில் மையம் கொண்டிருக்கக்கூடிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதால், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை மாவட்டங்கள் கடுமையான மழைப்பொழிவைச் சந்தித்து வருகின்றன.
குன்னூர், நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் நிலச்சரிவு அபாயம்
ஏற்கனவே குன்னூர் மலைப்பகுதி மற்றும் நீலகிரியின் சுற்றுவட்டாரப் பகுதிகள், கொடைக்கானல் மற்றும் மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் சாதகமான வானிலைச் சூழல் நிலவும்போது மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், இப்பகுதிகள் நிலச்சரிவு, மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயத்தைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை
கனமழையின் எதிரொலியாக, நேற்று இரவு முழுவதும் நீலகிரியில் கனமழை கொட்டித் தீர்த்ததை அடுத்து, அதிகளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய ஆறு தாலுகாக்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைப்பாதையில் மண்சரிவு
இந்தச் சூழலில், மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைப்பாதையில் கனமழை காரணமாகப் பல இடங்களில் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்துப் பாதிப்பு உண்டாகியிருக்கிறது. அதோடு, பாரதியார் பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி செல்லும் சாலையிலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
