நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் ஓட்டுநர் பலியானதை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அரசு பேருந்து சேவைகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில், நேற்று மலை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் கடும் மண் சரிவு
இந்தச் சூழலில், நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் கடுமையான மண் சரிவு ஏற்பட்டது. அப்போது, நீலகிரி மாவட்டம் பர்லியார் அருகே மண் சரிவில் சிக்கிய பேருந்து ஒன்று காட்டுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியானது.
இந்தச் சூழலில், மண் சரிவில் சிக்கி அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். மண் குவியலுக்குள் சிக்கியிருந்த அவரது உடல், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பேரிடர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் பலி
கோவையில் இருந்து ஊட்டிக்குச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, பர்லியார் பகுதியை நெருங்குவதற்கு முன்பு திடீரென டயர் பஞ்சரானது. இதன் காரணமாக, பேருந்தில் பயணித்த 50 பயணிகளும் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
பயணிகள் அனைவரும் இறங்கியதை அடுத்து, ஓட்டுநர் பேருந்தை மலைப்பாதையில் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போதுதான் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பயணிகள் முன்னதாக இறக்கிவிடப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவு…கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!
10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு
நீலகிரியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்கு மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை அரசு பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Source link
