எப்படி நடந்தது நேர்காணல்?
ஆறு நாள்களாக காலை, மாலை என்று நடந்து முடிந்த நேர்காணலில் என்ன நடந்தது எனக் கலந்துகொண்ட நிர்வாகிகள் தொடங்கி அறிவாலய சீனியர்கள் எனப் பலரிடமும் பேசினோம்.
“கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலும் அதிக விருப்ப மனு வந்திருந்ததால் ஒவ்வொரு தொகுதியிலும் பணம் கட்டியவர்களை மொத்தமாக அழைத்து நேர்காணல் நடந்திருந்தோம். இப்போது 234 தொகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு 15,372 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து நேர்காணல் நடத்துவது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று. அதனால், தொகுதி வாரியாக அனைவரையும் அழைத்து நேர்காணல் நடத்தத் திட்டமிடப்பட்டது.

முதலில் தனக்காகப் பணம் கட்டியவர்களை மட்டுமே அழைத்து நேர்காணல் நடத்தத் திட்டமிடப்பட்டது. இதிலேயே 5,000 விருப்ப மனு வரை கழிக்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக, பல தொகுதிகளில் நடப்பு மாண்புமிகுகளின் வாரிசுகள் பணம் கட்டியிருந்தார்கள். அவர்களையும் தலைவர் அழைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார். தொகுதி வாரியாக ஒருவர் தொடங்கி 50 பேர் வரை பணம் கட்டியிருந்தார்கள்.
அமைச்சர்களில் உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு, உள்ளிட்ட ஒருசிலர் தொகுதிகளில் மட்டுமே ஒருவர் நேர்காணலில் இடம்பெற்றிருந்தனர். மற்றபடி அமைச்சர்கள் தொகுதிகளில் கூட பலரும் பணம் கட்டியிருந்தார்கள்.
