நுாறு நாள் வேலை திட்டம்: கேரளாவை பின்பற்றுமா தமிழக அரசு?

திருப்பூர்: வரும், ஏப். முதல், நுாறுநாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில், மத்திய அரசு அறிவித்த புதிய விதி அமலுக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் திட்டம் தொய்வின்றி தொடர, கேரளாவை பின்பற்றி, விவசாய தொழிலிலும் இத்திட்ட தொழிலாளர்களை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த, 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டம், கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 100 வேலை நாட்கள் வேலை, தினசரி சம்பளமாக, 300 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும் நுாற்றுக்கணக்கானோர் இப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், இத்திட்டத்தில், 125 நாள் வேலை வழங்கும் வகையிலான மாற்றத்தோடு, புதிய விதியை மத்திய அரசு வகுத்து, வரும், ஏப்., முதல் அமல்படுத்த இருக்கிறது.

கடந்த, 3 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ‘மத்திய அரசு நிதி ஒதுக்காதது தான் இதற்கு காரணம்’ என, தமிழக அரசும் கூறி வருகிறது.

வரும், ஏப். முதல், நுாறு நாள் வேலை திட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதி, அமலுக்கு வர இருக்கிறது. அதன்படி, இத்திட்டத்திற்கு, மாநில அரசும், 40 சதவீத நிதி பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியால் திணறி வரும் தமிழக அரசு, இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

கேரளாவை பின்பற்றலாமே… அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் கூறியதாவது:

கேரளாவில், தனியார் விவசாய நிலங்களில், நிலங்களை சமப்படுத்துவது, பண்ணைக் குட்டை வெட்டுவது, சொட்டு நீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட விவசாயத்தின் அடிப்படை பணிகளில் நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி நிர்வாகத்திடம் பெயர் பதிவு செய்து, தங்கள் தோட்டங்களில் பணிபுரிய நுாறு நாள் திட்டப்பணியாளர்களை ஒதுக்க வேண்டும் என பதிவு செய்வர்.

பதிவு மூப்பு அடிப்படையில், அவர்களது தோட்டங்களில் பணியாற்ற நுாறு நாள் திட்டப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில், பாதியளவு நிதியை, தனியார் தோட்ட நிர்வாகத்தினர் கிராம ஊராட்சிக்கு வழங்கிவிடுவர். எஞ்சிய தொகை அரசின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படுகிறது.

கேரளாவை பின்பற்றி, தமிழகத்திலும் நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

திட்டமிட்டு சிதைக்கப்படும் நல்ல திட்டம்!

தமிழக விவசாயிகள் சங்கங் களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது: நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் என்பது நல்ல திட்டம்; நல்ல நோக்கம். ஆனால், தமிழகத்தில் இத் திட்டம், திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது. அதாவது, நுாறு நாள் வேலை திட்டத்தில் முழு நேரமும் வேலை செய்ய வைத்தால், தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க வேண்டும்; ஆனால், அவர்களை முழுநேரம் வேலை செய்ய விடாமல், பெயரளவுக்கு பணிக்களத்துக்கு வரவழைத்து விடுகின்றனர். தொழிலாளர்களும் மரத்தடியில் அமர்ந்து பொழுதுபோக்குகின்றனர். பின், அவர்களுக்கு பாதி சம்பளத்தை மட்டும் கொடுத்து விட்டு, எஞ்சிய பணத்தை திட்டத்தை செயல்படுத்தும் அந்தந்த பகுதி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சுருட்டிக் கொள்கின்றனர்; இதற்கு, உள்ளாட்சி பிரதிநிதிகளும் உடந்தையாக உள்ளனர். இதை ஒரு ‘முறையில்லா சிறைவைப்பு’ என்று தான் சொல்ல வேண்டும்; இதை ஒழுங்குப்படுத்தினால் தான், திட்டத்தின் நோக்கம் வெற்றி பெறும் இவ்வாறு, அவர் கூறினார்.

Source link