நூறு நாள் வேலைத் திட்டம்: தவெக அரசு ஒதுக்கிய ரூ.100 கோடியால் பயனில்லை- பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் – pmk leader anbumani urges cm vijay for rs 100 crore no use for 100 day employment scheme

100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியும், அதற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் தமிழக முதல்வர் விஜய் உத்திரவுட்டுள்ளார். இந்நிலையில், தவெக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராம்தாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 100 நாள் வேலை என அறியப்படும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான வளர்ச்சியடைந்த பாரதம் & கிராமப்புற வேலைவாய்ப்பு&வாழ்வாதார உறுதித் திட்டத்தின்படி, கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்குவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் அரசு ஒதுக்கிய போதாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்புமணி அறிக்கை

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் சரியானது என்றாலும் கூட, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அரசின் நோக்கத்தை நிறைவேற்ற போதாது என குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 100 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், அத்திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்த மத்திய அரசு, ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்துடன் கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு இப்போது ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ரூ.9,192 கோடி தேவைப்படும்

இந்த நிதியைக் கொண்டு கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்க முடியுமா? என்பது தான் கேள்வி குறிப்பிட்டுள்ள அவர், வளர்ச்சியடைந்த பாரதம் & கிராமப்புற வேலைவாய்ப்பு & வாழ்வாதார உறுதித் திட்டத்தின்படி வேலை பெறுவதற்காக தமிழ்நாட்டில் 81.08 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்திருக்கின்றன. அவர்களில் 69.11 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து வேலை பெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 69.11 லட்சம் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின்படி வேலை வழங்க வேண்டியுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்குவதற்காக ஒரு நாளைக்கு ரூ.367.68 கோடி தேவைப்படும். கூடுதலாக 25 நாள் வேலைவாய்ப்பை தமிழக அரசு தான் வழங்குகிறது என்பதால், அதற்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு ரூ.367.68 கோடி வீதம் 25 நாள்களுக்கு வேலை வழங்க குறைந்தது ரூ.9,192 கோடி தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்குக் கூட வேலை வழங்க முடியாது

தமிழக அரசு ஒதுக்கியுள்ள ரூ.100 கோடி என்பது தேவைப்படும் நிதியில் 1.08 விழுக்காடு மட்டும் தான். இந்த நிதியைக் கொண்டு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரே ஒரு நாளைக்குக் கூட வேலை வழங்க முடியாது. வளர்ச்சியடைந்த பாரதம் & கிராமப்புற வேலைவாய்ப்பு&வாழ்வாதார உறுதித் திட்டம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்பின் நேற்று வரை 112 நாள்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இதுவரை மொத்தம் 5.32 கோடி மனித நாள்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இத்திட்டத்தில் அவற்றில் இதுவரை 38.08 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் சராசரியாக 13.37 நாள்கள் வேலை வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இவர்கள் தவிர மீதமுள்ள 31.10 லட்சம் குடும்பங்களுக்கு இதுவரை ஒரே ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

150 நாள் வேலை என்பது கனவு

நடப்பாண்டில் மத்திய அரசு 60 சதவீதம் மட்டுமே நிதி வழங்குகிறது. 125 நாள் வேலை உறுதித் திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதன் பங்காக 40% தொகை ரூ.5305.04 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மக்களுக்கு வேலை வழங்குவதற்கு இந்த நிதி போதுமானதல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்குவதென்பது பெரும் கனவு.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதை உடனடியாக சாத்தியமாக்குவது கடினம் எனும் நிலையில், நடப்பாண்டில் மத்திய அரசின் பங்களிப்புடன் 60 நாள்கள், மாநில அரசின் நிதியில் 15 நாள்கள் என மொத்தம் 75 நாள்களாவது வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். மத்திய அரசின் பங்களிப்புடன் 60 நாள்கள் வேலை வழங்க ரூ.22,060 கோடியும், மாநில அரசு தன்னிச்சையாக 15 நாள் வேலை வழங்க ரூ.5,515 கோடியும் தேவைப்படும். இதற்கான மத்திய அரசின் பங்களிப்பை பேச்சு நடத்தி பெறவும், மாநில அரசின் பங்களிப்பை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Source link