மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்புரமணியமுக்கு கேரளாவில் கடந்த மார்ச் 31ஆம் தேதி சிலை திறக்கப்பட்டது. மலையாள திரைப்பட பாடகர்களின் சங்கமான ‘சமம்’ அமைப்பு சார்பில் பாலக்காடில் உள்ள வி.டி. பட்டத்திரிப்பாடு கலாச்சார வளாகத்தில் 10 அடி உயரமுள்ள திருவுருவ சிலை ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணியால் திறக்கப்பட்டது. இதில் எஸ்.பி.பி மகன் எஸ்.பி.சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் ஹரிஹரன், சித்ரா உள்ளிட்ட பல்வேறு முன்னணி பாடகர்கள் கலந்து கொண்டனர். பின்பு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘சங்கீத மீகம்’ எனும் தலைப்பில் பாலக்காட்டில் உள்ள வலிய கோட்டை மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பாடகர்கள் கலந்து கொண்டு பாடினர். இது கேரளாவில் நடந்த மிகப்பெரிய இசை அஞ்சலி நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவராலும் வர முடியவில்லை. இருப்பினும் அவர்கள் தனித்தனியே வீடியோ வாயிலாக எஸ்.பி.பி. குறித்தான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ரஜினி வெளியிட்ட வீடியோவில், “காலகந்தர்வா எஸ்.பி.பாலசும்புரமணியம். அவரைப் பற்றி தெரியாதவர்கள் இந்தியாவிலே கிடையாது. அவரது பார்வை மற்றும் திறமையால் எல்லோரையும் மகிழ வைத்தவர். அருமையான மனிதர். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது, மும்பையில் டிரான்சிட். மும்பைக்கு அதிகாலை 1.30 மணிக்கு வந்தேன்.
மும்பையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விமானத்தில் ஏறினார். அப்போதான் சங்கராபுரம் ரிலீஸ் ஆகியிருந்தது. அந்த பாட்டு அப்போது ரொம்ப பிரபலம். எஸ்.பி.பியை பார்த்ததும் விமானத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சங்கராபுரம் பாட்டு பாடுமாறு கூறினார்கள். அவர் பாட்டு பாடியதும், ‘ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர்’ என சொல்லிக்கொண்டு சென்னை வரும் வரை 1.30 மணி நேரம் சலிக்காமல் பாட்டு பாடி எல்லோரையும் மகிழ வைத்தார். அந்த மாதிரி அருமையான மனிதர் அகாலமாக இறந்து போனது மிக மிக வருத்தமான விஷயம். இந்த அவசர காலத்தில் எல்லோரையும் மறந்துவிடும் சூழலில் அவரை மறக்காமல் இருக்க பாலக்காட்டில் அருமையான சிலை உருவாக்கியிருக்கிறார்கள்” என்றார்.
கமல் வெளியிட்ட வீடியோவில், “பாலக்காடுக்கு நன்றி, யேசு ஏட்டாவிற்கு நன்றி. பெரிய மனிதர்களால் மட்டுமே சிறந்த கலைஞர்களாக இருக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. நீங்கள் இதைச் செய்வதே நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்பதற்குச் சான்றாகும். இது ஒரு அற்புதமான தருணம்; நான் இதைப் பாராட்டுகிறேன்.சேட்டா, எஸ்.பி.பி. மீது நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் திறமையின் மீதும், என் மீது நீங்கள் காட்டும் அன்பின் மீதும் நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். இது உங்கள் அன்புக்கு மற்றுமொரு உதாரணம், சேட்டா. அண்ணாயா சார்பாக நன்றி; நான் எப்போதும் எஸ்.பி.பி. அவர்களை ‘அண்ணாயா’ என்று அழைப்பேன், அவர் என்னை ‘தம்முடு’ என்று அழைப்பார்.” எனப் பேசினார்.
