ஆந்திர மாநிலத்தில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு நேற்று (31-03-26) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த திட்டம் இன்று (01-04-26) முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெசவாளர்களின் மின்கட்டணத்தைக் குறைக்கவும், நெசவு தொழிலை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, கைத்தறிகளுக்கு 200 அலகுகளும் (யூனிட்), விசைத்தறிகளுக்கு 500 அலகுகளும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் நெசவாளர் குடும்பங்களுக்கும், 11,488 விசைத்தறிகளுக்கும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக, ஆண்டிற்கு சுமார் 150 கோடி செலவாகும். இருப்பினும், இந்த திட்டத்தின் மூலமாகத் தகுதி வாய்ந்த கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள் ஆண்டிற்கு ரூ.8,640 வரை சேமிக்க முடியும். அதே நேரத்தில், விசைத்தறியாளர்கள் ஆண்டிற்கு ரூ.21,600 வரை சேமிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “நெசவாளர்களுக்கு ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.4000 ஆக உயர்த்துதல், நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சேமிப்பு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்குதல் மற்றும் நவீன எந்திரங்களை வாங்குவதற்கு 90 சதவீதம் வரை மானியம் வழங்குதல் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் ஆந்திர நெசவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த திட்டத்தின் மூலமாக நெசவு தொழில் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.
